தேர்தல் என்றால் வாக்குறுதிகளை வழங்குவது கட்சிகளின் வழக்கம். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதை மக்களிடம் வெளிப்படுத்தி, அதனடிப்படையில் வாக்குகள் கேட்பது என்பது ஒரு நடைமுறை. 1957ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் அளவிற்கான சூழலோ, வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளோ இல்லாத நிலையிலும், தி.மு.க. தனது முதல் தேர்தல் களத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் நடைபெற்ற அந்தக் காலத்தில், தங்களை எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் மக்கள் தேர்ந்தெடுத்தால் எதற்காகவெல்லாம் குரல் கொடுப்போம் என்பதை அந்தத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வின் நிறுவனர் அண்ணா குறிப்பிட்டிருந்தார். தி.மு.க. தனது முதல் தேர்தலிலேயே 15 எம்.எல்.ஏ.க்களையும் 2 எம்.பி.க்களையும் பெற்றது. அதன் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பினார்கள்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தனது தேர்தல் அறிக்கையை முன்வைத்து வாக்கு சேகரிப்பது தி.மு.க.வின் இயல்பு. 2006ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் களத்தின் கதாநாயகன் என்று தி.மு.க.வின் அந்த தேர்தல் அறிக்கை வர்ணிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதா இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று பிரச்சாரம் செய்தார். பின்னர் அவரே, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவோம் என்றார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி ஐந்தாவது முறையாக முதலமைச்சரானதும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.
கடந்த 2021 தேர்தலின் போது தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நிதிநிலைமையில் இது சாத்தியப்படாது என்றார். ஆனால், அந்த வாக்குறுதிக்கு வரவேற்பு கிடைத்ததை அறிந்து, அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றார். தி.மு.க.வை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள். தற்போது 1 கோடியே 31 இலட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 13 அன்று அதிகாலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாயை வரவு வைக்கச் செய்தார். தேர்தல் வரையிலான 3 மாதங்களுக்கான 3000 ரூபாயுடன் கோடைக்கால சிறப்பு நிதியாக 2000 ரூபாய் எனச் சொன்ன முதல்வர் ஸ்டாலின், மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்போது மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த 5000 ரூபாய் ஏற்படுத்திய தாக்கத்தையடுத்து, அ.தி.மு.க.வின் வலியுறுத்தலால்தான் ஸ்டாலின் அரசு பணம் போட்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். எனினும், தி.மு.க அரசுக்கு இந்த 5000 ரூபாய் உரிமைத்தொகை+சிறப்புத் தொகை பரவலான அளவில் சாதகமான பெயரை உருவாக்கியிருந்தது.
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்போ பின்போ கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் வழக்கத்திற்கு மாறாக, இந்த முறை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது தவணை முறையில் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி, மின்கட்டண உயர்வு, விலைவாசி ஆகியவற்றால் தமிழ்நாட்டு மக்கள் அவதிப்படுவதால், அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகையாக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் என்பது நிச்சயம் மிகப்பெரிய தொகை. மக்களிடம் அதற்கு வரவேற்பு இருக்கும். எனினும், தமிழ்நாட்டின் நிதிநிலையில் ஆயிரம் ரூபாய் வழங்குவதே சிரமம் என்று 5 ஆண்டுகளுக்கு முன் சொன்ன எடப்பாடி பழனிசாமி, மீண்டும் ஒருவேளை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பத்தாயிரம் ரூபாயை எப்படி வழங்குவார் என்ற கேள்வி எழுவது இயல்பு. நிருபர் ஒருவர் அந்தக் கேள்வியைக் கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில், “துறை சார்ந்த அதிகாரிகள், நிபுணர்கள், வல்லுநர்கள் ஆலோசனைகள் மூலம் வரியை உயர்த்தி வருவாயைப் பெருக்கி இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுவோம்” என்று பதிலளித்தார். கோடை வெயில் ஏறுவதற்கு முன்பே தேர்தல் களத்தில் மண்டை சூடாகியிருக்கிறது.(Online Tamil News)
தலையங்கம் : பழனிசாமியின் ரூ.10000