[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : கிரிக்கெட்-வெற்றியும் அரசியலும்

Spark Desk
Last updated: 2026-03-11 10:17 am
Spark Desk Spark Desk
T20 World Cup 2026

இந்திய கிரிக்கெட் அணி டி-20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வென்று சாம்பியன் ஆகியுள்ளது. டி-20 போட்டிகளில் இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மூன்னாவது சாம்பியன்ஷிப் வெற்றி. அதுவும் கடைசி இரண்டு கோப்பையைத் தொடர்ச்சியாக வென்ற அணி என்ற பெருமையும் சேர்ந்துள்ளது. இந்த முறை டி-20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்தது இந்தியாவிலும் இலங்கையிலும். போட்டியை நடத்தும் நாடுகள் கோப்பையைப் பெறுவதில்லை என்ற சென்ட்டிமென்ட்டையும் இந்தியா உடைத்துள்ளது.

இறுதிப்போட்டி நடைபெற்ற குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த மகத்தான வெற்றியிலும், மொத்தப் போட்டித் தொடரிலும் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பும்ராவின் பந்து வீச்சு உலகத்தின் சிறந்த பேட்ஸ்மென்களைத் திணறடித்தது. அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் பெற்ற சூர்யகுமார் யாதவ் தன் தோள்களில் கேப்டன் பொறுப்பு ஏறியதால் பெரிதாக விளையாடவில்லை. ஆனால், அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்துவதில் திறமையைக் காட்டியிருக்கிறார்.

கிரிக்கெட் போட்டியில் வெற்றி என்பது ஒட்டுமொத்த அணி வீரர்களின் கூட்டு முயற்சியும் உழைப்பும் ஆகும். அந்த வகையில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பலம் பொருந்திய அணியாகத் திகழ்கிறது. அதே அளவுக்கு பெண்கள் கிரிக்கெட் அணியும் பெயர் பெற்று விளங்குகிறது. இதற்கு அண்மையில் அந்த அணி பெற்ற வெற்றிகளே சான்றாகும். எனினும், இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் தேர்வு, விளையாடும் வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் விளையாட்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் ஜெய்ஷாவிடம் உள்ளது. இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன். அவருக்கும் கிரிக்கெட் ஆட்டத்திற்கும் எந்தளவு தொடர்பு என்பது எவருக்கும் தெரியாது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், ஆட்டக்காரர்கள், வல்லுநர்கள் ஆகியோரை இறுதி செய்வது ஜெய் ஷாதான். தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசியதுபோலவே , இந்திய அளவில் கிரிக்கெட்டுக்கும் காவிப் பெயிண்ட் அடிக்கும் வேலைகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2026 டி-20 போட்டியில் இந்திய அணி வென்ற உலகக் கோப்பையை இந்துக் கோயில் ஒன்றில் வைத்து வழிபாடு நடத்தச் செய்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரருமான கவுதம் கம்பீர். இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டெல்லியிலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சரின் மகன் இந்திய அணியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், பா.ஜ.க. பிரமுகர் பயிற்சியாளராக நீடிக்கிறார். இந்திய அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் இணைந்து பெற்ற வெற்றிக் கோப்பை இந்து கோவிலுக்கு மட்டும் வழிபாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அதே நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் இந்தத் தொடரில் மிகக் குறைந்த ஆட்டங்களில் ஆடும் வாய்ப்பையே பெற்றார். ஆனால், கடைசி மூன்று ஆட்டங்களில் சராசரியாக அவர் விளாசிய 90 ரன்கள்தான் இந்திய அணி கோப்பையைப் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றபின், தரையில் மண்டியிட்டு சிலுவைக் குறியிட்டு தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தினார். அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது அதன் மூலம் வெளிப்பட்டது. இந்திய அணியில் முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்பட பல மதத்தினரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகளும் முக்கியத்துவமும் மதக் கண்ணோட்ட அரசியல் அடிப்படையிலேயே கிடைக்கின்றன.

இந்திய கிரிக்கெட்டின் ஆண்கள் அணி போல, பெண்கள் கிரிக்கெட் அணியும் கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அந்த அணிக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டுகள் குவிந்தன. அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப்போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஜெமையா ரோட்ரிகஸ். அவரும் சதம் அடித்தபிறகு, தரையில் மண்டியிட்டு சிலுவைக் குறியிட்டு நன்றியை வெளிப்படுத்தினார். அவர் அப்படி செய்தார் என்பதற்காகவே பா.ஜ.க தரப்பினர் அவரை மிக மோசமாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ஒரு மதத்தின் கோவிலுக்கு சென்று கிரிக்கெட் அணி நிர்வாகிகளே வழிபடுவதும், மற்றொரு மதத்தைச் சார்ந்தவர் இந்திய அணியை வெற்றி பெற வைத்தாலுமே அவரை மதரீதியாக விமர்சிப்பதும் இந்திய கிரிக்கெட் அரசியலில் வளர்ந்து வரும் புற்றுநோய் ஆகும்.(Online Tamil News)

TAGGED:BCCI AdministrationCricket and PoliticsGautam GambhirIndian CricketIndian Sports PoliticsJemimah Rodriguesonline tamil newsSanju SamsonSports and ReligionT20 World Cup 2026tamil news today
Previous Article 11.03.2026 Rasi Palan இன்றைய ராசிப்பலன்- 11.03.2026
Next Article Pakistan Spy Agency, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை வீரர் கைது
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account