மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான சேத்தக் ஸ்கிரீன் அவார்ட்ஸ் (Chetak Screen Awards) விழாவில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் மொத்தம் 14 விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தில் ஜஸ்கிரத் சிங் மற்றும் ஹம்சா அலி மசாரி என இருவேறு பரிமாணங்களில் மிரட்டிய ரன்வீர் சிங் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

அதேபோல், ரஹ்மான் டகாய்ட் கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷய் கண்ணா சிறந்த துணை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதித்யா தார் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றதோடு, தொழில்நுட்பப் பிரிவுகளான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை, சண்டைப்பயிற்சி மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் எனப் பல முக்கியத் துறைகளிலும் ‘துரந்தர்’ படத்தின் ஆதிக்கமே நிறைந்திருந்தது.

இவ்விழாவில் ‘துரந்தர்’ பல விருதுகளைக் குவித்தாலும், நீரஜ் கெய்வான் இயக்கத்தில் உருவான ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது. ‘ஹக்’ திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய யாமி கௌதமுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
வசூல் ரீதியாக ஏற்கனவே 1000 கோடி ரூபாய் சாதனை படைத்து வரும் ‘துரந்தர்’, தற்போது இந்த விருதுகளின் மூலம் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. (Online Tamil News)


