முன்னாள் அதிமுக அமைச்சர் கே. சி. வீரமணிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
வேட்பு மனுவிற்கு ஆட்சேபம் தெரிவித்த வரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 50.000 ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும் என்றும் இரண்டு வாரம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கே.சி. வீரமணிக்கு முன் ஜாமீன் அளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யான பிரமாண பத்திரம் என்று காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்திலும் இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி. வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன்படி வழக்கை நடத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது என்று கூறப்பட்டு வந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வீரமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மீண்டும் பொய்யானது என்று சொல்லி காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தியும் அவரது நண்பர் ஜெயப்பிரகாசும் ஆட்சேபனை தெரிவிக்க நாற்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள்.
இதை அறிந்த கே. சி. வீரமணியின் ஆதரவாளர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.