உலகின் முன்னணி ஆன்லைன் பேஷன் மற்றும் அழகுசாதன நிறுவனமான ‘ASOS’-இன் இணை நிறுவனர்களில் ஒருவரான 58 வயது குவென்டின் கிரிஃபித்ஸ் (Quentin Griffiths), தாய்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பட்டாயாவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து விழுந்து அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் ASOS நிறுவனத்தைத் தொடங்கி, அதை ஒரு மிகப்பெரிய பேஷன் சாம்ராஜ்யமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. 2005-ம் ஆண்டு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு, அவர் பல்வேறு வணிக முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாய்லாந்து போலீசார், குவென்டின் கிரிஃபித்ஸ் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டனர். அந்த அறையில் எந்தப் பொருட்களும் சிதறிக் கிடக்கவில்லை என்றும், போராட்டம் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், இது தற்கொலையா அல்லது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா என்பது குறித்து மர்மம் நீடிக்கிறது. தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஒரு தொழிலதிபர் இப்படி மர்மமான முறையில் உயிரிழந்தது சர்வதேச வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


