[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
ONLINE TAMIL NEWS
தலையங்கம்

தலையங்கம் : வாக்குரிமையைக் காப்பாற்றுவோம்

Spark Desk
Last updated: 2026-02-24 10:34 am
Spark Desk Spark Desk


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படுவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை அது பதற்றத்திற்கும் பரபரப்புக்கும் உள்ளானதற்கு காரணம், எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைதான்.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அங்கே எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, பலரது வாக்குகள் பறிக்கப்பட்டன. வாக்காளர்கள் தங்கள் வீடுகளில் இல்லை, வயதுக்கான ஆதாரங்களைத் தரவில்லை, உறவினர் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை, இந்தியர் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறி பீகாரில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில் பலர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோலவே, தலித் மக்கள், பெண்கள், குடிசைப் பகுதி வாசிகள் உள்ளிட்ட பலரது பெயர்களும் நீக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கே பெரும் எதிர்ப்பலை உருவானது.

வாக்குத் திருட்டு செய்கிறது தேர்தல் ஆணையம் என்று எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தின. மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வின் விருப்பத்திற்கேற்ற தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் போன்ற தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும் எஸ்.ஐ. ஆர். நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க. இந்த எஸ்.ஐ.ஆர். குறித்த எச்சரிக்கை மணியை அடித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் இரண்டு முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஒன்று, வாக்காளர் தங்களுக்கான ஆதார ஆவணமாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் மூலம் உத்தவைப் பெற்றுத் தந்தது. இரண்டு, வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபடும் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலான பி.எல்.ஓ.வுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பாகநிலை முகவர்களான பி.எல்.ஏ.2வும் செல்லலாம் என தேர்தல் ஆணையத்தின் மூலம் உத்தரவாதத்தைப் பெற்றுத் தந்தது. இந்த இரண்டு வாய்ப்புகளும், பீகாரைப் போன்ற நிலைமையை தமிழ்நாட்டில் உருவாக்காமல், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை உருவாக்கின.

எஸ்.ஐ.ஆர். பணிகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டபோது தி.மு.க. தரப்பில் ஒவ்வொரு பூத்திலும் பி.எல்.ஏ.2 எனப்படும் கட்சியின் பாகநிலை முகவர்கள் சரிபார்ப்பு பணியை முழுமையாக மேற்கொண்டனர். தங்கள் கட்சிக்காரர்கள், அவர்களின் குடும்பத்தினரின் வாக்குகளை மட்டுமின்றி, மாற்றுக்கட்சியினர் வாக்குகளையும் உறுதிப்படுத்தும் வகையில் படிவங்களை நிரப்பித் தந்தனர். எஸ்.ஐ.ஆர். வேண்டும் என அதனை ஆதரித்து வழக்குப் போட்ட ஒரே கட்சியான அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்களும்கூட தி.மு.க நிர்வாகிகள் மூலமாகத் தங்கள் வாக்குகளை உறுதி செய்து கொண்டனர். டிசம்பர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள், ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய வாக்காளர்கள் ஆகியோரை பட்டியலில் சேர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

பிப்ரவரி 23 அன்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2025-ல் 6 கோடியே 41 இலட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5கோடியே 67இலட்சத்து 7ஆயிரத்து 380 ஆக குறைந்துள்ளது. 74 இலட்சத்து 7ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு 27 இலட்சத்து 53ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில்தான் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம், வீடு மாறியவர்கள், இறந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குரிமை கொண்டவர்கள் எனப் பலரும் நீக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரது பெயர்களும் தற்போது அவர்கள் சென்னையில் இல்லாததால் நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 60ஆயிரம் முதல் 70ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சென்னையில் குறைந்த அளவே வாக்குப்பதிவு சதவீதம் என்ற நிலை மாறக்கூடும்.

தகுதியில்லாத ஒருவர் கூட வாக்குரிமையைப் பெறுவதோ, தகுதி வாய்ந்த ஒருவர் கூட வாக்குரிமையை இழப்பதோ கூடாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்கிறோம் என்றது தேர்தல் ஆணையம். ஆனால், இப்போதும் வாக்காளர்கள் பெயர் விடுபடல், இரண்டு முறை பெயர்ப் பதிவு போன்றவை தென்படுகின்றன. நீதிமன்றத்தின் தலையீட்டினாலும், தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளின் தீவிரமான செயல்பாட்டாலும் பெருமளவு வாக்காளர்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுடன் தேர்தலை சந்திக்கும் மேற்குவங்காளத்தில் அதன் முதலமைச்சர் மம்தாபானர்ஜியே உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடியதும், அங்கு நடைபெறும் எஸ்.ஐ.ஆர். பணியை நீதித்துறை கண்காணிக்கும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவும் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழ்நாடு சற்று விழிப்படைந்துள்ளது.(Online Tamil News)

TAGGED:AIADMKAssembly Election 2026ChennaiDMKElection CommissionElectoral ReformsIndian DemocracySpecial Intensive RevisionSupreme Court of IndiaTamil Nadu PoliticsVoter List RevisionVoter Rights
Previous Article Today Rasi Palan 24.02.2026 இன்றையராசிப்பலன் – 24.02.2026
Next Article Chennai suburban trains cancelled ரயில்வே அலட்சியம் – சென்னை மக்கள் பேரதிர்ச்சி!
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account