அமெரிக்காவின் நீதித்துறை வெளியிட்டுள்ள கோப்புகள் இந்தியாவை அதிர வைத்திருக்கின்றன. வெளியாகியுள்ள பல கோப்புகளில் மிக முக்கியமான ஒன்று, “தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மருமகனும் ஆலோசகருமான ஜேரம் குஷ்னரையும், குடியரசு கட்சியின் வியூக வகுப்பாளர் ஸ்டீவ் பனானனையும் அறிமுகப்படுத்தி வைக்க ஜெஃப்ரி எப்ஸ்டீனை எதிர்பார்த்தது டெல்லித் தலைமை” என்பதுதான்.
டெல்லித் தலைமை என்று அமெரிக்க நீதிமன்றக் கோப்பு குறிப்பிடுவது குறித்த அதிகம் விளக்க வேண்டியதில்லை. பொதுவாகவே, மேலைநாடுகள் அந்தந்த நாடுகளின் தலைநகரைக் குறிப்பிட்டுத்தான் அங்குள்ள அரசியல் தலைமையையும் ஆட்சி நிர்வாகத்தையும் பற்றிய செய்திகளை வெளியிடும். லண்டன் அதிர்ந்தது என்றால் இங்கிலாந்து அரசாங்கம் அதிர்ந்தது என்று அர்த்தம். மாஸ்கோ பிடிவாதம் என்றால் ரஷ்யா விட்டுக்கொடுக்க மறுக்கிறது என்று அர்த்தம். அமெரிக்க நீதித்துறையின் கோப்பில் உள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர்தான் சர்ச்சைக்கு காரணமாகியிருக்கிறது.
அமெரிக்க நிதி முதலீட்டாளரான எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் சுரண்டல்களுக்குட்படுத்திய வழக்கை எதிர்கொண்டவர். தனது அரசியல்,பொருளாதார, சமூக அந்தஸ்துகளுக்காக உயர்மட்டங்களில் இருந்தவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தினார், அவர்களுடனான விமானப் பயணங்கள், தனித்தீவில் உல்லாசம் உள்ளிட்ட பலவும் 2019ஆம் ஆண்டில் வெளிவந்தன. நிதி மோசடிகளிலிருந்து தப்பிப்பதற்காக இவர்களின் செல்வாக்கை எப்ஸ்டீன் பயன்படுத்திக் கொண்டார் என்பதெல்லாம் தெரிய வந்தன.
ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய எப்ஸ்டீன், தனித் தீவை சொந்தம் கொண்டாடக்கூடிய செல்வாக்கு மிக்க மனிதராக எப்படி மாறினார்? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் உலக அரங்கில் என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன். இந்த ஒப்பந்தங்களுக்காக அவருடைய தனித் தீவிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்ட காமக்களியாட்டங்களில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள், உள்நாட்டு செல்வாக்குமிக்க பிரநிதிகள் யார்யார்? அவர்கள் முன் நடனமாடிய சிறுமிகளை எப்படி பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தினார்கள் உள்ளிட்டவை இணையத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன.
சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டலுக்காக 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன், அதே ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று தனது சிறை அறைக்குள் உயிரிழந்து கிடந்தார். விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே எப்ஸ்டீன் இறந்தது சந்தேகத்தைக் கிளப்பியது. அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தபோதும், அதிர்ச்சியும் சந்தேகமும் நீங்கவில்லை. எப்ஸ்டீனுக்கு உதவியாக இருந்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் வந்தார்கள். சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மூலமாக, எப்ஸ்டீனின் உலகளாவிய புரோக்கர்த்தனம் வெளிப்பட்டது.
ஏறத்தாழ 35 இலட்சம் ஆவணங்கள், 2000 வீடியோக்கள், 1,80,000 ஃபோட்டோக்கள் இவற்றை உள்ளடக்கியதுதான் எப்ஸ்டீன் ஃபைல்கள் (Epstein Files) என்கிற அமெரிக்க நீதித்துறையின் கோப்பு. அதில் டெல்லித் தலைமைக்குள்ள தொடர்புகள் தற்போது வெளியாகியுள்ளன. 2017 ஜூன் மாதத்தில் இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தையொட்டி, டிரம்ப் மருமகனுடனும் டிரம்ப்பின் வியூக வகுப்பாளருடனும் அம்பானிக்கு அறிமுகத்தை ஏற்படுத்தி வைக்கவேண்டும் என்பதுதான் எப்ஸ்டீனிடம் வைக்கப்பட்ட கோரிக்கை.
பின்னர், 2019 மே 23-ல் அன்று எப்ஸ்டீனும் அம்பானியும் சந்தித்துள்ளனர். இதுகுறித்து வியூக வகுப்பாளர் பனோனுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மெசேஜில், “பிரதமர் மோடியின் ஆளை நான் சந்தித்தேன். வாஷிங்டனில் (அமெரிக்கத் தலைமையில்) உள்ள யாரும் தன்னிடம் பேசவில்லை என அந்த நபர் குறைபட்டுக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளதாகவும் கோப்புகள் மூலம் அறிய முடிகிறது. 2017 முதல் 2019 வரை அம்பானிக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல், பிரான்ஸ் ஆகியவற்றுடனான அம்பானியின் ஒப்பந்தங்களிலும் எப்ஸ்டீன் இடம்பெற்றிருப்பதும், பிரான்ஸ் (France) நாட்டிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் விமானம் தொடர்பான ஒப்பந்தம் வரை இது நீள்வதும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள மற்றொரு முக்கிய செய்தி, ஜூலை 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் மோடி சென்ற போது எப்ஸ்டீன் அதற்கு உதவியாக இருந்தார் என்பதாகும். “மோடி என்னுடைய ஆலோசனையைப் பெற்று இஸ்ரேலுக்கு சென்று, அமெரிக்க அதிபரின் நலனுக்காக ஆடிப்பாடினார்” என்று எப்ஸ்டீன் தெரிவித்ததாக அமெரிக்க நீதித்துறையின் செய்தி தெரிவிக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை இதனை நிராகரித்துவிட்டது. பா.ஜ.க. தரப்பிலோ, இந்த செய்திகளுக்கும் அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)
காங்கிரஸ் கட்சி தரப்பில், இது இந்தியாவிற்கு அவமானகரமானது. நாட்டின் கண்ணியம் மற்றும் சர்வதேச அளவிலான நற்பெயர் தொடர்பாக விவகாரம் என்பதால் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றம் நடைபெறும் நேரத்தில், மர்மமும் சர்ச்சைகளும் நிறைந்த எப்ஸ்டீன் கோப்புகள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.



