போயஸ்கார்டன் என்றாலே அன்றைக்கு பூங்குன்றன் பெயர்தான் அதிமுகவினருக்கு நினைவுக்கு வரும். அன்றைக்கு ஜெயலலிதாவின் தயவை நாடிவரும் மற்றவர்களுக்கும் இந்த பெயர்தான் நினைவுக்குவரும். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் செல்வாக்குடன் வலம் வந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம்.
ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் இந்த நிலைமை மாறிவிட்டது. கட்சியும் சின்னாபின்னமாகிவிட்டது. அவ்வப்போது அதிமுக குறித்த நினைவுகளை பகிர்ந்து வரும் பூங்குன்றன், ஜெயலலிதா உதவியாளராக இருந்தும் ஏன் அதிமுகவில் தீவிரமாக இல்லை என்று பலரும் எழுப்பி வரும் கேள்விக்கு, அதிமுகவில் தனக்கு உறுப்பினர் அட்டை கூட இல்லை என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

’’அதிமுகவில் ஜெயலலிதாவின் நிழலாக, அவர்தம் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக, தொடர்ந்து 19 ஆண்டு காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு உண்மைத் தொண்டனுக்கு, இன்று இந்த இயக்கத்தில் என்ன நிலை?
ஜெயலலிதாவின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற எனக்கே, இந்த இயக்கத்தின் அடிப்படை அங்கீகாரமான உறுப்பினர் கார்டு (உறுப்பினர் அட்டை) வழங்கப்படவில்லை! எனக்கு உறுப்பினர் கார்டு வழங்காமல் தடுப்பவர்களைப் பார்த்து அன்று என் உள்ளம் உருகி, “இப்படிப்பட்டவர்கள் எப்படி இந்தக் கட்சியை வளர்க்கப் போகிறார்கள்?” என்று எண்ணி வேதனைப்பட்டது.
என்னை நீங்கள் திட்டமிட்டு ஒதுக்க ஒதுக்க, என் திறமைக்கும் உழைப்பிற்கும் மதிப்பளித்து எத்தனையோ புகலிடங்கள், எத்தனையோ வாய்ப்புகள் என்னை நாடி வந்தன. ஆனால், அத்தனையையும் நான் கொண்ட விசுவாசத்தின் காரணமாக உதறித் தள்ளினேன். என்னை நீங்கள் புறக்கணித்த போதிலும், உங்களை உச்சி முகர்ந்து போற்றிப் புகழ்ந்து வந்தேன். அதற்குக் காரணம் சுயநலம் அல்ல; நாமெல்லாம் உயிருக்குயிராய் நேசித்த, நாம் வளர்த்த இந்த இயக்கத்தின் மீதிருந்த மாறாத பற்றுதான்!

கட்சியின் நலனுக்காகவும், எழுச்சிக்காகவும் நான் நல்ல கருத்துக்களைச் சொல்லும் போதெல்லாம், “உங்களுக்கு ஏன் இந்த வேலை?” என்று ஏளனமாக என்னைக் கேட்டார்கள். அப்போதும் நான் எங்கும் ஓடிவிடவில்லை, மனம் கலங்கவில்லை. என் தனிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டு, உங்களுடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தேன். ஏன் தெரியுமா? “நீங்கள் வெற்றி பெற்றால்தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும்” என்கிற ஒற்றை இலக்கு மட்டும்தான் என் மனதில் இருந்தது.
ஆனால், இன்றோ காலம் தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. அன்று அம்மாவின் நம்பிக்கையைப் பெற்ற என்னை, இன்று தேடி வரும் இளைஞர்கள் எல்லாம், “அண்ணே, எப்படி மாற்றுக் கட்சிக்குச் செல்வது? இனி நம்ப கட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை” என்று ஆலோசனைக் கேட்கிறார்கள். அதை கேட்டிடும் போது எனக்கு ரத்தக்கண்ணீர் வருகிறது.
”எல்லோரும் எங்களைப் போன்று நீங்கள் ஒதுக்க ஒதுக்க, உங்களை பாராட்டுவார்கள் என்று நினைக்கிறீர்களா?” நிச்சயமாக இல்லை! உண்மைத் தொண்டர்களின் வயிற்று எரிச்சலும், அந்த வயிற்றில் எரியும் தீயும் எவ்வளவு கொடூரமானது தெரியுமா? அந்தத் தீ உங்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று என் விழிகளில் வேதனை, இதயத்தில் தாங்க முடியாத வலி நிறைந்திருக்கிறது.

”இன்று இந்த இயக்கத்தை ஒற்றுமைப்படுத்த உங்களால் முடியும். ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள்” என்று என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், “நானே இந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பில் (உறுப்பினர் அட்டை கூட இல்லாமல்) இல்லை” என்கிற கசப்பான உண்மை பலருக்குத் தெரிவதில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து உங்களை வசைபாடிவிட்டு வந்தவர்களுக்கெல்லாம் வந்தவுடனே பதவியை வாரி வாரி வழங்கினீர்கள். ஆனால் எனக்கு உறுப்பினர் அட்டையை கூட வழங்க நீங்கள் முன் வரவில்லை.
அம்மாவிற்காகவும், கழகத்திற்காகவும் இத்தனை ஆண்டுகள் உழைத்த எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண தொண்டனின் நிலை என்ன? எனக்கு ஆதரவு தர வேண்டிய உண்மைத் தொண்டர்களே, நீங்களே சிந்தியுங்கள்! “இவருக்குக் கூடவா உறுப்பினர் கார்டு தரவில்லை?” என்று உரத்த குரலில் கேட்க வேண்டிய தருணம் இதுவல்லவா?
இந்தக் குமுறல், ஒரு தனி மனிதனின் கோபம் அல்ல; இயக்கத்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு விசுவாசமிக்க தொண்டனின் ஆழமான இதயக் குமுறல்!’’ என்கிறார் பூங்குன்றன்.



