திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு முன்பாகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவாயிலில் ‘கர்தவ்யா தவார்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி. இது என்ன வார்த்தை? இதற்கு என்ன அர்த்தம்? என்ன இழவு என்றே தெரியவில்லையே? என்பதுதான் அவர்களின் ஆதங்கம். அதே வார்த்தை ஆங்கில எழுத்துகளிலும், இந்தி எழுத்துகளிலும் எழுதப்பட்டிருந்தது.
கர்தவ்யா என்றால் கடமை. தவார் என்றார் நுழைவாயில். இரண்டுமே இந்தி மொழிச் சொற்கள். இந்தியில் அதனை எழுதியதுடன், அதனை மொழிபெயர்க்காமல் அதே மொழியின் ஒலியுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறது மத்திய அரசின் ரயில்வே நிர்வாகம். இந்தி சொற்களைத் தமிழிலும் பிற மொழிகளிலும் அதே ஒலியுடன் எழுதுவது என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஒரு தொடர் செயல்பாடாகவே கொண்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி ஜங் ஷன் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், அதே ரயில்வே பெயர்ப்பலகைளில் தமிழில் எழுதும்போது திருச்சிராப்பள்ளி சந்திப்பு என்றுதான் இருக்கும். ஜங் ஷன் என்பதற்கான தமிழ்ச்சொல் சந்திப்பு. இப்படி எழுதுவதுதான் வழக்கம். ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறது என்றால், தமிழில் அதனை மலைக்கோட்டை விரைவுத்தொடர் வண்டி என்று குறிப்பிடுவார்கள். இந்த வழக்கத்தை மோடியின் பா.ஜ.க. அரசு சிதைத்து, எல்லா இடத்திலும் இந்தி மற்றும் சமஸ்கிருதச் சொற்களைத் திணிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களிலேயே உள்ளன. குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ஜல்ஜீவன் என்று பெயர். இந்திய தண்டனைச் சட்டம் என்பது பாரதிய நியாய சன்ஹிதா என்று மாற்றப்பட்டது. மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டமும் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டம் என மாற்றப்பட்டது. பிரதமர் பெயரில் விவசாயிகளுக்கு வழங்கும் கடனுதவி, நிவாரணம், பயிர்க்காப்பீடு உள்ளிட்ட அனைத்துமே இந்தி-சமஸ்கிருதப் பெயர்களில்தான் உள்ளன.
ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த மோகத்தைக் குறைத்து, இந்திய மொழிகாளை வளர்ப்பதற்காகத்தான் இத்தகைய பெயர்கள் வைக்கப்படுகின்றன என்றும், மசோதாக்கள் மற்றும் திட்டங்களின் பெயர் இந்திய மொழிகளில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கமாக நாடாளுமன்றத்தில் வழங்கப்படுகிறது என்றும் மத்திய பா.ஜ.க அரசு சப்பைக்கட்டுக் கட்டுகிறது. இந்திய மொழிகள் என்றால் இந்தியும் சமஸ்கிருதமும்தானா? மற்ற மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் அந்நிய மொழிகளா? சமஸ்கிருதத்திற்கு முன்பே இந்திய அரசால் செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் மொழியில் எந்தத் திட்டத்திற்காவது மோடி அரசு பெயர் சூட்டியுள்ளதா?
விமானங்கள் தொடர்பான சட்டமுன்வடிவுக்கு பாரதிய வாயுயான் வித்யேக் என்று பெயர் வைக்கிற மோடி அரசு, இந்திய அல்லது பாரத வானூர்தி சட்டமுன்வடிவு என்று பெயர் வைக்கத் தயங்குவது ஏன்? பா.ஜ.க ஆட்சி செய்யும் ஒடியா மாநிலத்தின் மொழியிலோ, மராட்டிய மொழியிலோ, கோவா மாநிலத்தையொட்டி மக்கள் பேசும் கொங்கணி மொழியிலோ ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதா?
இந்தியா முழுவதும் இந்தி மட்டுமே இருக்கவேண்டும். அதுவும் சமஸ்கிருதத்தின் அனைத்து வகை ஆதிக்கமும் கொண்ட வடிவில் இருக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் நோக்கமாகும். இந்தி-சமஸ்கிருதத் திணிப்புக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகிற மாநிலம், தமிழ்நாடு. திணிப்பைத் தடுக்கும் வகையில் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, 60 ஆண்டுகளுக்கு மேலாக அதனை செயல்படுத்தியும் வருகிறது. அதனால் தமிழ்மொழியும் தமிழர்களும் வளர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலை, இந்தியாவின் பல மாநிலங்களில் இல்லை.
இந்தி மொழியையும் சமஸ்கிருதப் பண்பாட்டையும் அனுமதித்த காரணத்தால் அவை தங்கள் தாய்மொழியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் இழக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டன. தற்போது பல மாநிலங்களும் விழிப்புணர்வு பெற்று தங்கள் தாய்மொழிக்கான குரலை எழுப்பும் நிலையில், எப்போதுமே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் முன்னிற்கும் தமிழ்நாடு திருச்சி ரயில்வே கோட்ட நுழைவாயிலில் இந்தித் திணிப்பு செய்யப்படுவதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் கண்டித்தன. தார்ப்பூசி அழிக்கும் போராட்டம் நடந்தது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தினகரன் கண்டித்தார். பா.ஜ.க.விலேயே உள்ள தமிழிசையும் கண்டித்தார். எடப்பாடி பழனிசாமி மென்மையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதன் விளைவாக, கர்த்தவ்யா த்வார் என்ற எழுத்துகள் நீக்கப்பட்டுள்ளன. வாலாட்டும் போதெல்லாம் ஒட்ட நறுக்காவிட்டால், நடுவீட்டில் உட்கார்ந்து நாட்டாண்மை செய்யும் இந்தி.(Online Tamil News)
தலையங்கம் :அடிக்கடி வாலாட்டும் இந்தி



