பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC), ரஷ்யாவிடமிருந்து சுமார் ₹10,000 கோடி மதிப்பிலான 288 எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்குத் தேவையான முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்த ஏவுகணை அமைப்புகள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு, சுமார் 314 கி.மீ தொலைவில் இருந்த எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தி அசத்தின.

அந்தச் சமயம் பெருமளவில் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கையிருப்பு குறைபாட்டை நிவர்த்தி செய்யவும், நாட்டின் வான் எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)

இந்த அவசரக் கொள்முதலின் கீழ் 168 நீண்ட தூர ஏவுகணைகளும், 120 குறுகிய தூர ஏவுகணைகளும் ‘Fast Track’ முறையில் வாங்கப்பட உள்ளன. இது தவிர, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட மீதமுள்ள இரண்டு எஸ்-400 சிஸ்டம்கள் இந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியா வரவுள்ளன. வான் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், இந்த எஸ்-400 அமைப்புகளுடன் ‘பான்ட்சீர்’ (Pantsir) எனப்படும் குறுகிய தூர ஏவுகணை பாதுகாப்பையும் இணைத்துச் செயல்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.


