மும்பை பங்குச்சந்தையில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் அந்நிய முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 47 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 92.86 என்ற அளவில் இருந்தது. வர்த்தக நேரத்தின் இடையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் வலுவடைந்து, முந்தைய நாள் வர்த்தக முடிவான 93.06-லிருந்து உயர்ந்து, இறுதியில் 92.59 என்ற அளவில் நிலைபெற்றது. இது கடந்த சில நாட்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று பலவீனமடைந்ததும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்திய ரூபாய்க்குச் சாதகமாக அமைந்தன.

குறிப்பாக, உள்நாட்டுப் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை லாபத்தில் இயங்கியது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏப்ரல் 2-ஆம் தேதி, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 188 காசுகள் வரை ரூபாய் மதிப்பு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சிறு சரிவுகளைச் சந்தித்தாலும், இன்று மீண்டும் வலுவான மீட்சியை ரூபாய் பதிவு செய்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததும் இந்த உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


