உலக முதலீட்டாளர் மாநாடு என்பதை தமிழ்நாடு 2015ஆம் ஆண்டில் முதன்முதலாகப் பார்த்தது. அப்போது செல்வி.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். வெளிநாட்டு நிறுவனத்தினர் வருகை தந்ததால், அவர்களை வரவேற்க சியர்ஸ் லீடர்ஸ் பாணியில் தெருவோர நடனங்களும், பாரம்பரியக் கலை நடனங்களும் நடத்தப்பட்டன. சென்னையின் முக்கிய தெருக்களில் திருவிழா போன்ற தோற்றம் இருந்தது. முதலமைச்சர் முன்னிலையில் அந்த நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டன. அந்த ஒப்பந்தங்களின் மதிப்பு 2இலட்சத்து42ஆயிரம் கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
ஒப்பந்தங்களில் சொல்லப்பட்ட தொகை முதலீடாக மாறியதா? எத்தனை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தங்களின் உற்பத்தியைத் தொடங்கின? எத்தனை பேருக்கு இந்த உலக முதலீட்டாளர் மாநாடு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு முரண்பட்ட தகவல்களே வெளியாயின. உண்மையில், புரிந்துணர்வு ஒப்பந்த முதலீட்டுத் தொகை என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவை திருப்திப்படுத்துவற்காக அறிவிக்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது. செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24 ஆகும். அதாவது 24-2-1948. இதில் முதலில் உள்ள 24ஐயும், அடுத்துள்ள 2ஐயும் எடுத்து, 2இலட்சத்து 42 கோடி ரூபாய் எனத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தளவுக்கு முதலீடு வந்து சேரவில்லை.
பின்னர், எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) முதலமைச்சரானார். அவரது ஆட்சிக்காலத்திலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. முந்தைய முதலீட்டாளர் மாநாட்டைவிட அதிக முதலீடுகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் நேரில் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டனர். இவையெல்லாம் செய்திகளாகவே மட்டுமே அமைந்தன.
2021ல் தி.மு.க. ஆட்சி அமைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில்துறை வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தினார். 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் அவர் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது தொழில்துறை அவர் வசமிருந்தது. அந்த அனுபவமும், அவருடைய ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் முனைப்பான செயல்பாடுகளும் தொழில்துறையில் கவனம் செலுத்தச் செய்ததுடன், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது என்கிற இலக்கையும் நிர்ணயித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin).
தொழில்துறையில் சிறப்பாக விளங்கும் கோவை மாவட்டத்தில் முதலீட்டாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதுடன், தமிழ்நாடு அரசின் தொழிற் கொள்கையும் வெளியிடப்பட்டது. தங்கம் தென்னரசு நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், தொழில்துறை அமைச்சரானார் முனைவர் டி.ஆர்.பி. ராஜா. ஆளுநர் மாளிகையில் பதவியேற்றபின், தலைமைச் செயலகம் செல்வதற்கு முன், அவர் சென்றது ஹூண்டாய் கார் நிறுவனத்தின் புதிய முதலீடு தொடர்பான நிகழ்வுக்குத்தான்.
முதலமைச்சருடன் சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டதுடன், உலக முதலீட்டாளர் மாநாட்டையும் சென்னையில் நடத்தினார். பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தக்ஙள் போட்டன. அந்த ஒப்பந்தங்களின்படி, முதலீடுகளைத் தமிழ்நாட்டுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டார் தொழில்துறை அமைச்சர்.
மின்வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஒன்றரை ஆண்டுகளில் தூத்துக்குடியில் தனது உற்பத்தியைத் தொடங்கி, அந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கியது. அதுபோலவே, டாடாவின் ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி நிறுவனம் மிகக் குறுகிய காலத்தில் ராணிப்பேட்டையில் தனது உற்பத்தியைத் தொடங்கி, கிராமப்புற பெண்கள் உள்பட பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கியது. சென்னை முதல் ஒசூர் வரை, கோவை முதல் திண்டிவனம் வரை என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் முதலீடுகள் செய்யப்பட்டு, பரவலான தொழில்வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது மு.க.ஸ்டாலின் அரசு.
பொருளாதாரத்தில் 11.19% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்ட ஒரே மாநிலம் என்ற நிலையை அடைந்துள்ளது தமிழ்நாடு. அதுமட்டுமின்றி, தொழில்துறையில் அதிக வேலைவாய்ப்புகள், பெண்களின் பங்களிப்பு என இந்தியாவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. எனினும், அந்நிய நேரடி முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில்தான், இந்தியாவிலேயே முதல்முறையாக, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எந்தளவுக்கு முதலீடாக மாறி, வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன என்பதை விளக்கும் வகையில் செயலாக்க மாநாட்டை நடத்திக் காட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர். அதில், அனைத்து புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளார் தொழில்துறை அமைச்சர். சியர்ஸ் லீடர்ஸ் டான்ஸூடன் நடந்த ஜெயலலிதா காலத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சாத்தியமான முதலீடுகளையும் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதை ஊடகங்களிடம் விளக்கினார் அமைச்சர். தொழில்துறை வளர்ச்சியில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது தமிழ்நாடு.(Online Tamil News)



