சவுதி அரேபியாவின் ரியாது நகரில அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட 12 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஈரானின் தாக்குதல்கள் மற்றும் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

கடந்த மார்ச் 18 அன்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்த நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.மேலும், மக்கள் வசிக்கும் பகுதிகள், சிவில் உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 51-வது பிரிவின் கீழ், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர்கள், ஈரான் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஈரான் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டியது அவசியம் என்றும், அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஹார்முஸ் நீர்ச்சந்தி போன்ற முக்கிய கடல் பகுதிகளில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதையும், ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையும் ஈரான் கைவிட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.(Online Tamil News)



