சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி , சினிமா என்று பரபரப்பாக பேசப்பட்டார். அவர் இப்போது நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை வெளுத்து வாங்கி வருகிறார்.
அண்மையில் வேலூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஒரு குட்டி கதை சொன்னார். ஜல்லிக்கட்டு காளையை அனுபவம் வாய்ந்த பலசாலிகள் பலரும் அடக்க படாத பாடு பட்டபோது, ஜாலியாக ஆடிக்கொண்டே வந்த சிறுவன் சட்டைப்பையில் இருந்து இரண்டு புல்லுக்கட்டை காட்டி ஜல்லிக்கட்டு காளையை அடக்கிவிட்டான். அந்த சிறுவன் தான் தவெக என்பது அந்த குட்டிக்கதை.

இதை கடுமையாக விமர்சித்து ஜூலி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தா. அதில், ‘’ஹாய் அண்ணா, வேலூர் பரப்புரை பார்த்தேன். வழக்கம் போல இந்த பரப்புரையிலும் ஒண்ணும் இல்ல. ஜல்லிக்கட்டு காளை பத்தி ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி இருந்தீங்கன்னா. அதை கேட்டதும் என்னால பேசாம இருக்க முடியல. நீங்க பாட்டுக்கு, போற போக்குல, ஜல்லிக்கட்டு காளை நின்னுச்சு. அதுக்கு புல்லுக்கட்ட காட்டி ஓரமா விட்டுட்டேன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்க.
உங்களோட கட்சியில இருக்குற பாதி பேர் மைனர் ஆளுங்க. நானும் போய் புல்லுக்கட்ட காட்டுறேன்னு போய் ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா, என்னண்ணே பன்னுறது? 50 , 50 ஆவே இருக்கட்டும்ணே, 500 ஆக்கிடாதீங்க. போராடி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கி இருக்கோம். உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போயிடாத அண்ணே..’’ என்று விமர்சித்திருந்தது வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் தமிழக அரசின் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் பேசிய பிக்பாஸ் ஜூலி, விஜய்யோடு சீமானையும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
‘’டெல்லியில் இருந்து ஏவப்படும் ஈடி ரெய்டு, சிபிஐ ரெய்டு..இதெல்லாம் வச்சு திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் மேல் எந்தவொரு தூசியும் பட்டுவிடக்கூடாது என்பதில் என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன்.

ஜல்லிக்கட்டுக்காக நான் எப்படி குரல் கொடுத்தேனோ? அதுமாதிரி இதுக்காகவும் குரல் கொடுப்பேன்.
நிறைய திரைத்தளபதிகள் இருக்காங்க. ஓட்டைப்பிரிச்சு உள்ளே குதிச்சு ஆட்டைய போடலாமுன்னு நினைக்கிறாங்க. ஆனால் இதுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்.
எத்தனை திரைத்தளபதிகள் வந்தாலும் மிசா காலத்தில் இருந்து என்றைக்கும் ஒரே தளபதி நம்ம முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

இது தமிழ்நாடு. இது திராவிடக்கோட்டை. இதை எந்த பிராமண கடப்பாரைக் கொண்டும், எந்த ஸ்டார் கடப்பாரைக் கொண்டும் , எந்த திரைத்தளபதி கடப்பாரையைக் கொண்டும் ஒண்ணும் செய்ய முடியாது. ஏன் என்றால் இந்த கோட்டை கதவுகளுக்கு முன்னாடி நாங்கள் நிற்கிறோம். உங்களால எங்களை அசைக்கக்கூட முடியாது. என்னை எவ்வளவு டேமேஜ் செய்தாலும் பயப்பட மாட்டேன். சண்டை செஞ்சு பழகுன கூட்டம் இது. சண்டை செய்வோம். ’’



