அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிரடியான முடிவுகள் மற்றும் நிர்வாகக் கொள்கைகளுக்கு எதிராக ‘No Kings’ (மன்னர்கள் கிடையாது) என்ற பெயரில் நாடு தழுவிய பிரம்மாண்ட போராட்டம் வெடித்துள்ளது.

நேற்று, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 3,300-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 80 லட்சம் முதல் 90 லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போருக்காகப் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்படுவதை மக்கள் எதிர்த்தனர். கல்வி, மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பயன்படுத்த வேண்டிய மக்களின் வரிப்பணத்தை, அழிவை ஏற்படுத்தும் போருக்குப் பயன்படுத்துவது தவறு என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்பதை வலியுறுத்தும் வகையிலும், அதிபரின் செயல்பாடுகள் ஒரு மன்னரின் சர்வாதிகாரப் போக்கை கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியும் இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மினசோட்டாவில் மத்திய ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட குடிவரவு ஆர்வலர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் முதல் ஹாலிவுட் பிரபலங்கள் வரை பலரும் தங்களை இணைத்துக் கொண்டனர். குறிப்பாக, மினசோட்டாவின் செயின்ட் பால் பகுதியில் நடைபெற்ற பேரணியில் புகழ்பெற்ற பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் நடிகை ஜேன் போண்டா ஆகியோர் பங்கேற்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வாஷிங்டன் டி.சி-யில் வெள்ளை மாளிகை முன்பாகத் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், “மன்னர்களுக்கு இடமில்லை” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய மக்கள் எழுச்சியாகக் கருதப்படும் இந்தப் போராட்டங்கள் லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களிலும் எதிரொலித்தன. ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகள் உலக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், வெள்ளை மாளிகை இந்த எதிர்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டுத் தூண்டிவிடப்பட்ட அரசியல் நாடகம் என்று அதிபர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் போக்கு அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


