பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம் தற்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 80 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு புகலிடம் அளிப்பதாகக் குற்றம் சாட்டி, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பக்திகா ஆகிய மாகாணங்களில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் இந்தத் தாக்குதலில் இலக்காக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தாலிபான் அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்தச் செயல் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை நேரடியாக மீறும் செயல் என்றும், இதற்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நேரடித் துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது. பல இடங்களில் எல்லைச் சாவடிகள் தகர்க்கப்பட்டுள்ளதோடு, இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் உயிருக்கு அஞ்சி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். சர்வதேச அளவில் கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால் எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மோதல் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Online Tamil News)



