பைக் டாக்ஸி மற்றும் கார் டாக்ஸி சேவைகளில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் ரேபிடோ (Rapido), தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி துறையிலும் தடம் பதித்துள்ளது. ‘Ownly’ என்ற பெயரில் புதிய உணவு டெலிவரி செயலியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெங்களூருவின் சில பகுதிகளில் சோதனை முறையில் இயங்கி வந்த இந்தச் சேவை, மார்ச் 3-ம் தேதி முதல் அந்த நகரம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் மட்டும் சுமார் 20,000 உணவகங்கள் இந்தத் தளத்தில் இணைந்துள்ளன.

இந்த புதிய சேவையின் மிக முக்கியமான அம்சம் அதன் ‘கமிஷன் இல்லாத’ (Zero Commission) நடைமுறையாகும். பொதுவாக ஸ்விகி, ஜொமாடோ போன்ற முன்னனி நிறுவனங்கள் உணவகங்களிடம் இருந்து 20% முதல் 30% வரை கமிஷன் வசூலிக்கும். ஆனால், ரேபிடோவின் ‘Ownly’ தளம் உணவகங்களிடம் இருந்து எந்தவித கமிஷனும் வசூலிப்பதில்லை. இதனால் உணவகங்கள் தங்களின் மெனு விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் உணவகத்தில் நேரடியாகச் சென்று சாப்பிடும் அதே விலையிலேயே ஆன்லைனிலும் உணவை ஆர்டர் செய்ய முடியும்.
ரேபிடோ நிறுவனம் தனது மிகப்பெரிய பைக் டாக்ஸி நெட்வொர்க்கையே இந்த உணவு டெலிவரிக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து டெலிவரி செலவுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், மறைமுகக் கட்டணங்களோ அல்லது பிளாட்பார்ம் கட்டணங்களோ (Platform fees) இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைத் தொடர்ந்து, இந்தச் சேவை விரைவில் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உணவு டெலிவரி சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.(Online Tamil News)



