இந்திய பேட்மிண்டன் (Indian badminton) வரலாற்றில் ஒரு பொற்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாய்னா நேவால் (Saina Nehwal) . இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக பல ஆண்டுகள் உலக அரங்கில் பிரகாசித்த அவர், போட்டித் தர பேட்மிண்டனிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 35 வயதான சாய்னா, தனது உடல் இனி போட்டித் தர விளையாட்டை தாங்க முடியாத நிலைக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
சாய்னா நேவால், 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற Singapore Open போட்டிக்குப் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் அப்போது அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை. சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய அவர், “நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன். நான் இந்த விளையாட்டுக்குள் என் விருப்பத்தால் நுழைந்தேன்; அதுபோலவே என் விருப்பத்தால் வெளியேறினேன். அதனால் ஓய்வு அறிவிப்பு அவசியம் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “நாம் இனி விளையாட முடியாத நிலைக்கு வந்தால், அதுதான் முடிவு. அதில் தவறில்லை” என்றும் கூறினார். தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக பேசிய சாய்னா, “என் முழங்காலில் உள்ள கார்டிலேஜ் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. எனக்கு ஆர்த்ரைடிஸ் உள்ளது. இதை என் பெற்றோரும், பயிற்சியாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இனி என்னால் இதைத் தொடர முடியாது என்று அவர்களிடம் கூறிவிட்டேன்” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.(online tamil news)
ஒரு உலக தர வீராங்கனையாக இருக்க தினமும் 8 முதல் 9 மணி நேரம் வரை பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் சமீப காலங்களில் சாய்னாவின் முழங்கால் ஒரு அல்லது இரண்டு மணி நேர பயிற்சியிலேயே வீங்கத் தொடங்கியதாக கூறுகிறார். “முன்புபோல் என் முழங்கால் தள்ளிச் செல்லவில்லை. அதிக நேரம் பயிற்சி செய்வது சாத்தியமில்லாமல் போனது. அதனால் இனி தள்ளிப் போக முடியாது என்று முடிவு செய்தேன்” என அவர் விளக்கினார்.

சாய்னா நேவாலின் காயம்
2016 ரியோ ஒலிம்பிக்கின் போது, சாய்னாவுக்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. அது அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அளவிற்கு தீவிரமானது. பின்னர் அவர் மீண்டும் களத்திற்கு திரும்பினாலும், அந்த காயம் தொடர்ந்து அவரை வாட்டியது. 2024-ஆம் ஆண்டில், தன்னுடைய முழங்காலில் ஆர்த்ரைடிஸ் இருப்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இறுதியில், உடலின் எச்சரிக்கையை ஏற்று அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
கோர்ட்டில் சாய்னாவின் சாதனைகள்
பி.வி. சிந்து உலக அரங்கில் பிரகாசிப்பதற்கு முன், இந்திய பேட்மிண்டனின் “ராணி” சாய்னா நேவால்தான். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையாக அவர் வரலாறு படைத்தார். காமன்வெல்த் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் 15 பதக்கங்களும், ஜூனியர் மட்டத்தில் 4 பதக்கங்களும் அவரது சாதனை பட்டியலில் உள்ளன. மேலும், BWF உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்த பெருமை அவருக்கே உரியது.

இந்திய பேட்மிண்டனில் ஏற்பட்ட வெற்றிடம்
இளம் வயதிலேயே பேட்மிண்டன் கோர்ட்டில் காலடி வைத்த சாய்னா, காலப்போக்கில் உலகின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக வளர்ந்தார். சீனாவின் ஆதிக்கத்தை உடைத்து, இந்தியாவை பேட்மிண்டன் உலக வரைபடத்தில் உயர்த்தியவர் அவர். அவரது ஓய்வு, இந்திய பேட்மிண்டனில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அந்த இடத்தை நிரப்ப புதிய தலைமுறைக்கு காலம் தேவைப்படும்.