[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: சவாலாகும் சட்டம்-ஒழுங்கு?

Spark Desk
Last updated: 2026-03-04 10:15 am
Spark Desk Spark Desk
Nanguneri double murder


நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் இத்தனை விரைவாக ஒரு அறிக்கையை இதற்கு முன் வெளியிட்டிருக்கிறாரா என்பது ஆச்சரியம்தான். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பில் அறிக்கைப் போர் நடத்துவார். தமிழ்நாட்டில் எது ஒன்று நடந்தாலும் அதை உடனே தி.மு.க. ஆட்சியின் மோசமான நிர்வாகத்தின் சாட்சி என்று சொல்வது பா.ம.க. அன்புமணியின் வழக்கம். பா.ஜ.க. தரப்பில் யாரேனும் ஒருவர் ஒவ்வொரு நாளும் தி.மு.க. அரசுக்கு எதிராக அறிக்கை விடுவது வழக்கம். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் தி.மு.க. அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு நாங்குநேரியில் அந்தக் கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

போதை கும்பல் ஒன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மற்றும் சிலர் காயம்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள். உயிர் பறிபோன இருவரில் ஒருவர் வடஇந்தியர். மற்றொருவர், அதே பகுதியைச் சார்ந்தவர். கொலையாளிகளும், கொல்லப்பட்ட அந்தப் பகுதியைச் சார்ந்தவரும் வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதிப் பதற்றமும் அந்தப் பகுதியில் அதிகமானது. நாங்குநேரி பகுதியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இது குறித்து தங்களின் ஆறுதலை, இறந்தவரின் குடும்பத்திற்குத் தெரிவித்ததுடன், அரசின் சார்பிலான நடவடிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.

காவல்துறை உடனடியாகத் தனிப்படைகளை அமைத்து, கொலையுடன் தொடர்புடைய 6 பேரைப் பிடித்து, கொலைக்கான பின்னணி குறித்த விசாரணையை நடத்தி வருகிறது. இரட்டைக் கொலை ஏற்படுத்தியுள்ள அதிர்வும், போதையில் ஊர் முழுவதும் ரகளை செய்து, பரபரப்பான இடங்களில் ஆயுதங்களால் கண்ணில் பட்டவர்களை வெட்டியதற்கு காரணம் என்ன என உடனடியாகத் தெரியாத நிலையும் இந்தப் பிரச்சனையின் முழுக் கோணத்தை வெளிக்கொண்டு வர வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

நாங்குநேரியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதையுடனான வன்முறை என்பது புதியதல்ல. சாதி வன்மத்துடனான தாக்குதல்களும் கொலைகளும் தென்மாவட்டங்களைப் பல ஆண்டுகள் நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றன. ஒவ்வொரு சாதிக்குமான ஓட்டுக் கணக்குடன் தொடங்கப்பட்ட சாதி அமைப்புகளால் வடதமிழ்நாட்டிலும் தென்தமிழ்நாட்டிலும் பல மோதல்களும் கொலைகளும் நடந்துள்ளன.

அமைதியை ஏற்படுத்துவதற்காக அரசின் சார்பில் சமாதானக் குழுக்கள், விசாரணை கமிஷன்கள், அதன் அறிக்கைகள் அடிப்படையிலான நடவடிக்கைகள் என மேற்கொள்ளப்பட்டாலும் ஒவ்வொரு சாதியினருக்கும் தங்கள் சாதி மீதுள்ள பெருமிதமும், தங்களுக்கு கீழே மற்ற சாதிகள் இருக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும், பிற சாதியினரை ஏற்றுக்கொள்ளாத மனநிலையும் தென்மாவட்டங்களில் இப்போதும் ஆணவக் கொலைகள், சாதிரீதியாகக் குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காவல்துறையிடம் அலட்சியம் இருப்பதை அங்குள்ள மக்களே சுட்டிக்காட்டுகிறார்கள்.

குறிப்பாக, கொரோனா காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் மதுபானத்தைக் கடந்து, கஞ்சா உள்ளிட்ட புதிய போதைப் பொருட்கள் பெருமளவில் புழங்கத் தொடங்கி விட்டன. தலைநகர் சென்னை தொடங்கி கிராமப்புறங்கள் வரை பள்ளி மாணவர்கள் எளிதில் வாங்கக்கூடிய வகையில் இந்தப் போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. இளமைத் துள்ளும் வயதில் எது பற்றியும் கவலைப்படாத தலைமுறையினர், கஞ்சா மற்றும் பிற போதையில் தங்களை மூழ்கடித்துக்கொண்டு, என்ன செய்கிறோம் என்று தெரிந்தும்-தெரியாமலும் வன்முறை வெறியாட்டத்தை நடத்துகிறார்கள்.

திருத்தணி அருகே ரயிலில் பயணித்த வடமாநிலத்தவரை ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிய போதை இளைஞர் கூட்டத்தை சில மாதங்களுக்கு முன் காணொளியாகப் பார்த்து அதிர்ந்தது தமிழ்நாடு. திருத்தணியும் நாங்குநேரியும் வெவ்வேறு திசையில் இருக்கின்றன. ஆனால், போதையும் வன்முறை எத்திசையும் பரவி சட்டம்-ஒழுங்கை கேள்விக்குள்ளாக்குகிறது. சாதிக்கலவரத்திற்கு மட்டுமின்றி, வடமாநிலத்தவருக்குத் தமிழ்நாட்டில் பாதிப்பில்லை என்ற கண்ணோட்டத்திற்கும் இவை வழிவகுக்கின்றன.

இவற்றைக் கவனிக்க வேண்டிய போலீஸ் என்னதான் செய்கிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிகாரிகளுக்கு உள்நோக்கம் உள்ளதா என்ற சந்தேகமும் வருகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் போலீஸ்துறையில் கட்சிக்காரர்கள் தலையீடு இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. 5 ஆண்டுகால ஆட்சியில் கட்சிக்காரர்கள் தலையீடு இல்லை. இனியும் தாமதிக்காமல் முதல்வர் தலையிட வேண்டிய அவசரமும் நெருக்கடியும் உருவாகியுள்ளது. இந்தப் போக்கை வளரவிடுவது தமிழ்நாட்டிற்கு ஆபத்து. (Online Tamil News)

TAGGED:Caste ViolenceCrime in Tamil NaduDMK GovernmentDrug Abuse in Tamil NaduLaw and OrderNanguneri IncidentPolitical ReactionsPublic SafetyTamil Nadu PoliceTamil Nadu Politics
Previous Article Daily Horoscope 04 March 2026 இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
Next Article Mojtaba Khamenei ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account