சூலூர் சிறுமிக்கு நேர்ந்த கதி தமிழகத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. கைதாகி இருக்கும் கொடூர கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்கிற முழக்கங்கள் வலுக்கின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் வரையிலும் சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை சமாளிக்க டிஜிபி கோவை சென்றிருக்கிறார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 4ம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சிறுமி நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் தெருவில் உள்ள கடைக்கு சென்றுவருவதாக தாயிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். வெகு நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பவில்லை என்பதால் தாய் தேட ஆரம்பித்திருக்கிறார்.

இதையடுத்து மகளை காணவில்லை என்று சூலூர் போலீசில் புகாரளித்திருக்கிறார் தாய். வாலிபர் கார்த்தி குறித்த சந்தேகத்தையும் தெரிவித்திருக்கிறார். போலீசாரின் தேடுதல் வேட்டையில் 25 மணி நேரத்திற்கு பின்னர் நேற்று கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமியில் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் முகம் மற்றும் உடலின் பல பகுதிகள் சிதைப்பட்டிருந் திருக்கிறது.

இந்த கொடூரக்கொலையை செய்தவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகார்கள், மாவட்ட ஆட்சியர் , அமைச்சர்கள் நேரில் சென்று சமாதானப்படுத்தியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து போலீசார் விசாரணயை துரிதப்படுத்தி சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் இரண்டு வாலிபர்கள் அந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து அழைத்துச் செல்வது தெரியவந்திருக்கிறது. அவர்கள் யார் என்று சிறுமியின் தாய் விபரத்தை சொல்லி இருக்கிறார். தனது வீட்டுக்கு அருகே முன்பு வாடகைக்கு இருந்து விட்டு காலி செய்து சென்ற வாலிபர் அந்த பகுதியில் பைக்கில் தனது நண்பருடன் சுற்றி வந்தது தெரியவந்திருக்கிறது.
கொடூரக்கொலையை செய்து விட்டு ஊர்க்காரர்களுடன் இருந்து சிறுமியை தேடுவது மாதிரி நாடகம் ஆடி வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 33 வயது கார்த்தியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜையும் போலீசார் கைது செய்தனர். போலீசின் பிடியில் இருந்த தப்பியோடிய கார்த்தி, கட்டிடத்தில் இருந்து குதித்ததில் கை முறிவு, கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மோகன்ராஜ் வரும் 27ம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று சிறுமிக்கு உடற்கூராய்வு நடந்து அது மதியம் 1 மணிக்கு மேல் நிறைவு பெற்றது.
இந்நிலையில், குற்றவாளிக்கு தண்டனை வழங்கும் வரையிலும், குற்றவாளியை சுட்டுக்கொல்லும் வரையிலும் மகளின் உடலை வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி இருந்தார். போலீசார் சமாதானப்படுத்தி சிறுமியின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமியின் உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
குற்றவாளிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், வேல்முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.



