தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்கத் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. முதன்முதலாகத் தேர்தலில் நின்ற 1957ஆம் ஆண்டு முதல், தனது தேர்தல் அறிக்கையை முன்வைத்தே அந்தக் கட்சி, தேர்தல் களத்தை சந்தித்து வருகிறது. மக்களின் எண்ணங்களை அறிய தேர்தல் அறிக்கைத் தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு, அது ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பிலும் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் தமிழ்நாட்டு நிர்வாகிகளைக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. இந்த குழுக்கள் மக்களை சந்தித்து, அவர்களின் கருத்துகளை ஆராய்ந்து, சாதகமானவற்றின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடுவது வழக்கம். அந்த வாக்குறுதிகள் அடிப்படையில் மக்கள் தங்களுடைய வாக்குகளை அளிப்பது உண்டு.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு களத்தில் இறங்குவதற்கு முன்பே, அ.தி.மு.க.வின் சார்பில் 5 அறிவிப்புகளை வெளியிட்டு, அரசியல் பரபரப்பை உருவாக்க முனைந்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. குலவிளக்குத் திட்டம் என்ற பெயரில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்பது ஓர் அறிவிப்பு. அடுத்ததாக, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பயணம் தொடர்வதுடன், அ.தி.முக. ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்பது இன்னொரு வாக்குறுதி. அம்மா கனவு இல்லம், 150 நாள் வேலை உறுதித் திட்டம் போன்றவையும் எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளில் அடங்கும்.
தற்போதைய தி.மு.க. அரசு, 1கோடியே 30 இலட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த அறிவிப்பை கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதியாக அந்தக் கட்சி அறிவித்தபோது, தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. மாநிலத்தின் நிதி நிலைமையில், மாதம் 1000 ரூபாய் வழங்க வழியே இல்லை என்று தி.மு.க.வை அப்போது சாடினார். ஆனால், தி.மு.க. ஆட்சியில் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறார்கள் என்றதும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் 2000 ரூபாய் என்று அறிவித்திருப்பது, தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொள்வதாகவே அமைந்துள்ளது. (Online Tamil News)
அ.தி.மு.க.வுக்கு இது புதியதல்ல. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை, தேர்தல் களத்தின் கதாநாயகன் என்று தோழமைக் கட்சியினர் வர்ணித்தனர். அந்த அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடையில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா (Jayalalitha) இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தார்.
“நான்கு முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு நிதி நிர்வாகம் பற்றித் தெரியாமல் போனது எப்படி? 2 ரூபாய்க்கு எப்படி ஒரு கிலோ அரிசி தர முடியும்?” எனத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார் செல்வி. ஜெயலலிதா. ஆனால், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக, முதல்வர் ஜெயலலிதாவிடம் உளவுத்துறையினர் தெரிவிக்க, அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில், “நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தரப்படும்” என அவர் அறிவித்தார். இதன் மூலம், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. ஏற்கும் நிலையை அப்போதே உருவாக்கினார் ஜெயலலிதா. அதே வழியில் எடப்பாடி பழனிசாமியும் பயணிக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளில் சாத்தியமானவை நிறைவேற்றப்படுவதும், மற்றவை மறக்கப்படுவதோ, காலந்தாழ்த்தப்படுவதோ வழக்கம். மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டிய நீட் தேர்வு ரத்து சட்டத் திருத்தம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சமவேலைக்கு சம ஊதியம், சத்துணவுப் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட தி.மு.க.வின் 2021 தேர்தல் வாக்குறுதிகளை வலியுறுத்தி, தொடர்ச்சியானப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத்திட்டம் போன்ற கோரிக்கைகள், அவர்களின் ஏற்புடன் மாநில அரசால் புதிய அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க. கடந்த முறை அளித்த 505 வாக்குறுதிகளில், 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். நிறைவேற்றப்பட்டதை விட, நிறைவேறாமல் இருப்பதே கண்களுக்குத் தெரியும். இந்த நிலையில், நிறைவேற்ற முடியாத பலவற்றை அள்ளித் தெளித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami).
.



