ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு அமெரிக்கா விதித்த 10 நாட்கள் அவகாசத்தில் இன்னும் 48 மணிநேரம் மட்டுமே உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத்’ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஈரான் உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் அந்நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவைச் சந்திக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த கடல் வழிப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. ஈரான் இதனை மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரான் தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் ‘கார்க் தீவு’ ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்குவோம் என்று டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் தற்போது அனுமதி அளித்துள்ளது. எஞ்சியிருக்கும் 48 மணிநேரத்திற்குள் ஈரான் அடிபணியுமா அல்லது போர் மேலும் தீவிரமடையுமா என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளன. அணு விபத்துகளைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் ராணுவக் கட்டுப்பாட்டைப் பேண வேண்டும் என சர்வதேச அணுசக்தி முகமை வலியுறுத்தி வருகிறது.(Online Tamil News)


