தனது தலைமையிலான அதிமுக பத்து தோல்வியை சந்தித்துவிட்டதால் 2026 சட்டமன்ற தேர்தல் பழனிசாமிக்கு ரொம்பவே நெருக்கடியை கொடுத்தது. மீண்டும் ஒரு தோல்வி என்றால் அதிமுகவில் தலைமை மாற்றம் வேண்டி போர்க்கொடி உயர்த்துவர். கட்சி பிளவுபடும் என்ற பேச்சு இருந்தது.
அதே மாதிரி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காததால் கட்சிக்கு தலைமை மாற்றம் வேண்டும் என்கிற குரல்கள் வலுத்தன. இதற்கு பழனிசாமி ஒப்புக்கொள்ளாததால் டிடிவி தினகரன், ஓபிஎஸ்க்கு பின்னர் அதிமுக மீண்டும் பிளவுபட்டது. பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் அணி என்று இரு அணிகளாக பிரிந்து நிற்கிறது அதிமுக.

சண்முகம் அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததில் பழனிசாமி அதிருப்தி அடைந்து, அத்தனை பேருக்கும் பதில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அதிரடி காட்டினார். பதிலுக்கு பொதுக்குழுவை கூட்டி பழனிசாமியை நீக்கி அதிரடி காட்ட நினைத்த சண்முகம் தரப்பின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கட்சிக்கு எதிராக உறுப்பினர்கள் நடந்துகொண்டதால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார் பழனிசாமி. இந்த கடிதம் நிலுவையில் உள்ள நிலையில் சண்முகம் அணியில் இருந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்கல் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துவிட்டனர்.

தங்கமணியும் தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய உள்ளார் என்றும், அவருக்கு தவெகவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்றும் தகவல் பரவ, ’’தவெக அவ்வளவுதான்; இந்த தேர்தலோடு முடிந்துவிட்டது. இனி மக்கள் அந்த கட்சி மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். இனி திமுக – அதிமுகதான். வரும் தேர்தலில் களத்தில் நின்று வெற்றி வாகை சூடலாம்’’ என்று தங்கமணி உள்ளிட்ட சண்முகம் தரப்பினரிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் பழனிசாமி.

பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பொறுப்பை மீண்டும் வழங்கினால் மட்டுமே அதிமுகவுக்கு திரும்புவோம் என்று உறுதியாக சொன்னதால் இது குறித்து முடிவெடுக்க இன்று மாலையில் பழனிசாமி இல்லத்தில் தங்கமணி உள்ளிட்ட சண்முகம் அணியினர் ஆஜராகி இருக்கிறார்கள்.



