ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது அதிமுக. இது மாற வேண்டும் என்று பலரும் சொல்லி வரும் நிலையில் மறைந்த முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் அதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.
’’அதிமுக சந்தித்து வரும் தொடர் பின்னடைவுகளுக்குப் பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சமூகக் காரணிகள் உள்ளன. குறிப்பாக, கட்சியின் தலைமைத்துவ மாற்றமும் அது சமூகங்களிடையே ஏற்படுத்திய தாக்கமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஒரு கட்சியின் தலைமைப்பொறுப்பில் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் அமரும்போது, மற்ற சமூகத்தினர், குறிப்பாகப் பட்டியலின மக்கள் மத்தியில் ஒருவிதமான தயக்கமும் பாதுகாப்பு குறித்த அக்கறையும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இதற்கு மாறாக, சிறுபான்மை அல்லது பொதுவான பிம்பம் கொண்ட தலைவர்கள் இருக்கும்போது அனைத்துத் தரப்பு மக்களும் தங்களை அக்கட்சியோடு எளிதாகப் பிணைத்துக் கொள்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில், அதிமுகவின் அசைக்க முடியாத பலமாகப் பட்டியலின மக்களின் ஆதரவு இருந்தது.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு, ஒரு வலுவான ‘அனைவருக்குமான பிம்பம்’ குறையத் தொடங்கியதால், அந்த ஆதரவு தளம் படிப்படியாகச் சரிந்தது.
தற்போதைய அரசியல் சூழலில், பட்டியலின மக்கள் தங்களை அதிமுகவிலிருந்து முழுமையாகத் துண்டித்துக் கொண்டதோ அல்லது புறக்கணிப்பதோ அக்கட்சியின் தேர்தல் தோல்விகளுக்கு ஒரு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர் எனப் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்துச் சென்ற அதிமுகவின் ‘சமூகக் கூட்டமைப்பு’, தற்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நகர்வதாக எழும் பிம்பம், மற்ற சமூகத்தினரிடையே ஒருவித இடைவெளியை உருவாக்கியுள்ளது.
ஒரு காலத்தில் ஏழை எளிய மக்கள் மற்றும் பட்டியலின மக்களின் கோட்டையாகத் திகழ்ந்த அதிமுக, மீண்டும் தன் பழைய பலத்தைப் பெற வேண்டுமானால், அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையையும், நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்’’