இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு வரும் 30ம் தேதி வரையிலும் தடை விதித்திருக்கிறது மத்திய அரசு. இதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லும் மத்திய அரசு, முக்கியமான குற்றச்சாட்டாக நீட் தேர்வு பாதிப்பை முன் வைத்திருக்கிறது. அதனால்தான் நீட் வினாத்தாள் கசிவை தடுக்கும் விதமாக நீட் மறு தேர்வு முடியும் வரையிலும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
நீட் தேர்வு பாதிப்புக்கும் டெலிகிராம் செயலிக்கும் என்ன தொடர்பு?
அண்மையில் வினாத்தாள் கசிவினால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வினாத்தாள் கசிவுக்கு டெலிகிராம் செயலி முக்கிய காரணம் என்கிறது தேசிய தேர்வு முகைமை. இந்த செயலின் மூலமாகத்தான் பெரும்பாலும் வினாத்தாள் கசிந்தது என்கின்றன புகார்கள். அதனால்தான் நீட் மறு தேர்வு முடியும் வரையிலும் வினாத்தாள் கசிவை தடுக்கும் விதமாக டெலிகிராம் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகைமை பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரையின் பேரில் ஜுன் 22 வரையிலும் டெலிகிராம் செயலியை தடை செய்தது மத்திய அரசு. மேலும், டெலிகிராமில் ஏற்கனவே பகிரப்பட்ட தகவலை சரி செய்கின்ற வசதியை 30ம் தேதி வரையிலும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த தடைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் டெலிகிராம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது மத்திய அரசு.
‘’சைபர் குற்றங்கள், பயங்கரவாதம், சிறார் துஷ்பிரயோகம், போதை பொருள் கடத்தல், நிதி மோசடி போன்றவற்றிற்கு டெலிகிராம் பயன்படுத்தப்படுகிறது. டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய முடியவில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது’’ என்று மத்திய அரசு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறது.



