கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தையான அலின் ஷெரின் ஆபிரகாம், தனது மரணத்திற்குப் பிறகும் ஐந்து பேருக்குப் புதிய வாழ்க்கையைத் தந்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, பெண் குழந்தை அலின் தனது தாய் மற்றும் தாத்தா, பாட்டியுடன் காரில் கோட்டயத்திலிருந்து திருவல்லா நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு கார் மீது இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த மற்றவர்கள் காயமடைந்த நிலையில், குழந்தை அலினுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 13-ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து, தங்கள் மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குழந்தையின் பெற்றோர்கள் முன்வந்தனர்.
இதையடுத்து, குழந்தையின் கல்லீரல் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாதக் குழந்தைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறும் மற்றொரு குழந்தைக்கும் வழங்கப்பட்டன. மேலும், இதய வால்வு ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கும், கண்கள் அமிர்தா மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன. ஒரு பிஞ்சு குழந்தையின் மூலம் ஐந்து பேருக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ள இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோரின் இந்த மனிதாபிமான செயலை கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.(Online Tamil News)



