ஆப்பிள் நிறுவனம் தனது உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை (WWDC) இந்த வருடம் ஆன்லைனில் மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது. இந்நிகழ்வில் ஆப்பிள் சாதனங்களுக்கு வரவிருக்கும் பல புதிய தொழில்நுட்ப அம்சங்களை அந்நிறுவனம் காணொளி காட்சி மூலம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியதுடன், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பல முக்கிய நுணுக்கங்களை இந்த மாநாட்டில் முதன்மைப்படுத்திக் காட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சிரியின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் முற்றிலும் புதியதாக மாற்றப்பட்டு, ‘சிரி ஏஐ’ (Siri AI) என்ற பெயரில் அதிநவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூகுளின் ஜெமினி (Gemini AI) மாடலைக் கொண்டு சிரியை ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைத்து ஒரு புதிய கட்டமைப்பை ஆப்பிள் உருவாக்கியுள்ளது. இந்த புதிய மேம்பாட்டின் மூலம், சிரி ஏஐ முன்பை விட மிக இயல்பான உரையாடல் திறன் கொண்டதாகவும், பயனர்களின் தனிப்பட்ட சூழலையும் தேவைகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் தனித்துவமான தன்மையுடையதாகவும் இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இத்துடன் கூகுள் லென்ஸ் (Google Lens) தொழில்நுட்பத்தைப் போலவே, பயனர்கள் தங்களின் குரல் வழிகாட்டுதல் மூலம் தேவையான தகவல்களைக் காட்சி நுண்ணறிவு (Visual Intelligence) வழியாக உடனுக்குடன் பெறும் புதிய வல்லமையையும் இந்த உதவியாளர் பெற்றுள்ளார். இந்த அதிநவீன சிரி ஏஐ தொழில்நுட்பமானது ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச், கார்ப்ளே மற்றும் விஷன் ப்ரோ ஆகிய அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும், இதில் சிரி ஏஐ உடனான உரையாடல்களின் ஹிஸ்டரியை ஐகிளவுடு (iCloud) வசதி வழியாகப் பாதுகாப்பாக ஒத்திசைக்க (Sync) முடியும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.(Online Tamil News)