அதிமுகவின் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் துண்டு அணிவித்து வரவேற்றார் ஆதவ் அர்ஜூனா. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பத்து நாட்களிலேயே கோவிந்தசாமி அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது முதல் அக்கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தின் விசில் அடிச்சான் குஞ்சுகள் இடையே அரசியல் புரிதல் இல்லை என்றும் அதனால் இத்தனை வருட அரசியல் அனுபவம் உள்ள தான் இதற்கு மேலும் தமிழக வெற்றி கழகத்தில் இருக்க விரும்பவில்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார் . அதே நேரம் தமிழக வெற்றி கழகம் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியாததால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் கோவிந்தசாமி.
அதிமுகவில் இத்தனை காலம் இருந்த கோவிந்தசாமி தமிழக வெற்றி கழகத்தினை பெரிதாக நம்பி சென்றார். அங்கே சென்ற பின்பு தான் கட்சியின் உண்மை நிலவரம் கோவிந்தசாமிக்கு தெரிய வந்திருக்கிறது. கட்டமைப்புகள் சரியாக அமைக்கப்படாத கட்சியில் உரியவர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. மரியாதையும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது . இதன் பின்னரே கோவிந்தசாமி தான் ஏன் தமிழக வெற்றி கழகத்திற்கு வந்தோம் என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் பின்னர் வேறு எந்த கட்சிக்கும் செல்ல அவருக்கு மனமில்லை. இதனால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.