டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தற்காலிக தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது டெலிகிராம் செயலி.
நீட் மறு தேர்வை முன்னிட்டு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த telegram செயலி இன்று முதல் செயல்பட தொடங்கி இருக்கிறது. ஆனாலும், புதுப்பிக்கப்பிட்ட பின்னரே டெலிகிராம் செயலி முழுமையாக செயல்பட தொடங்கும். வரும் 30ம் தேதி வரையிலும் எடிட் செய்யும் வசதிக்கு தடை செய்யப்படடிருக்கிறது.
அண்மையில் வினாத்தாள் கசிவினால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வினாத்தாள் கசிவுக்கு டெலிகிராம் செயலி முக்கிய காரணம் என்கிறது தேசிய தேர்வு முகைமை. இந்த செயலின் மூலமாகத்தான் பெரும்பாலும் வினாத்தாள் கசிந்தது என்கின்றன புகார்கள். அதனால்தான் நீட் மறு தேர்வு முடியும் வரையிலும் வினாத்தாள் கசிவை தடுக்கும் விதமாக டெலிகிராம் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகைமை பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரையின் பேரில் ஜுன் 22 வரையிலும் டெலிகிராம் செயலியை தடை செய்தது மத்திய அரசு. மேலும், டெலிகிராமில் ஏற்கனவே பகிரப்பட்ட தகவலை சரி செய்கின்ற வசதியை 30ம் தேதி வரையிலும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த தடைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில் டெலிகிராம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது மத்திய அரசு.
‘’சைபர் குற்றங்கள், பயங்கரவாதம், சிறார் துஷ்பிரயோகம், போதை பொருள் கடத்தல், நிதி மோசடி போன்றவற்றிற்கு டெலிகிராம் பயன்படுத்தப்படுகிறது. டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய முடியவில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது’’ என்று மத்திய அரசு குற்றச்சாட்டுகளை அடுக்கியது.
இதன் பின்னர், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69Aன் கீழ் செயலியை முடக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அரசு எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நியாயமானதே எனக் கூறி டெலிகிராமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்.
நேற்று 22ம் தேதி அன்று தடை நீங்கியதை அடுத்து இன்று முதல் டெலிகிராம் செயலி செயல்பட தொடங்கி இருக்கிறது.



