தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பேசியபோது, ’’கழகத்தின் தலைவர் என்கிற முறையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன், யாரையும் குறை சொல்லாதீங்க. சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. கட்சி நிர்வாகிகள் மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவே இருக்காது. இந்த தேர்தலில் நடந்தது கவர்ச்சி மாயாஜால சுனாமி. எங்கே கோளாறு நடந்தது? எங்கே மெத்தனம் ஏற்பட்டது? என்பதுதான் முக்கியம். டீ கடைகளில் பேசும் அரசியலை இனி சமூக வலைத்தளங்களிலும் பேச வேண்டும்’’ என்றார் மு.க.ஸ்டாலின்.
மேலும் தனது பேச்சில், “இப்போது நம்மை பார்க்கின்ற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்” என்று புலம்புகிறார்கள். அதுமட்டுமில்லை, “இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே என்று பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன். இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம்” என்றார் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய அவர், ‘’என்னால் அமைக்கப்படும் விசாரணைக்குழு இணையதளம் மூலமாக கழக தொண்டர்கள், மக்களால் தரப்படுகின்ற ஆலோசனைகளை வைத்து கழகத்தின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய இருக்கிறேன். தவிர மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக 20 நாட்களுக்குள் அறிக்கை தர வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். செயல்பட முடியும் என்கிற மாவட்டச் செயலாளர்கள் மட்டும் செயல்படுங்கள், முடியாது என்று நினைக்கின்றவர்கள் விலகிவிடலாம்.
பொதுவாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம். அதனாலதான், மற்ற கட்சிகள் மாதிரி நம்ம எம்.எல்.ஏக்களை ரெசார்ட்டில், நட்சத்திர விடுயில் ஒளித்து வைக்க வேண்டிய பயமில்லாம, தோல்வியிலும் நாம் தைரியமாவே இருந்தோம்”
என்னைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையாக உழைத்தேன். உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறியும் உழைத்தேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வைத்தேன்.
இதுவரை எந்த அரசும் செய்து தராத சாதனைகளை நாம் செய்து கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியாக நம்ம ஆட்சி இருந்தது. இது மக்களுக்குத் தெரியும். என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.
ஒரு தேர்தலில் தோற்ற நாம், மறு தேர்தலில் வென்றுகாட்டி இருக்கிறோம். உங்களது கடுமையான உழைப்பால் நம்மை மீண்டும் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். அதுதான் தி.மு.க. அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து பணியாற்றுங்கள். நமது இந்தத் தோல்வி தற்காலிகமானதுதான். நாம் எப்போதும் வெற்றியை நோக்கிப் பயணிப்போம்” என்றார் அழுத்தமாக.



