மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தினால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச நிதி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், உலகளாவிய நிதி சூழல் மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு ஈரான் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய இந்த மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போதைய சூழலில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்தாலும், சர்வதேச சந்தையில் நீடிக்கும் இந்த எரிபொருள் விலை உயர்வு மற்றும் போர் பதற்றம் காரணமாக, எதிர்காலத்தில் இந்தியாவில் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமான சூழல் ஏற்படலாம் என்று அவர் கவலை தெரிவித்தார். நிதி விவகாரங்களில் இந்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடனும், சர்வதேச சந்தையின் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்தும் செயல்பட்டு வருவதாகவும் சஞ்சய் மல்ஹோத்ரா அந்த மாநாட்டில் குறிப்பிட்டார்.(Online Tamil News)



