அகமதாபாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நடுவரிசையில் களம் புகுந்த டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அவர் விளாசிய 63 ரன்களின் உதவியுடன் தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். குறிப்பாக, மார்கோ யான்சனின் அபாரமான பந்துவீச்சில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிவம் தூபே மட்டும் சிறிது நேரம் போராடி 42 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அவருக்கு ஈடுகொடுக்க யாரும் இல்லாததால் இந்திய அணி 18.5 ஓவர்களில் வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
தென்னாப்பிரிக்காவிடம் பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றதால் இந்தியாவின் ‘நெட் ரன்ரேட்’ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த திடீர் பேட்டிங் சரிவு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.(Online Tamil News)


