சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை இணைக்கும் மிக முக்கியமான கிங் ஃபஹ்த் காஸ்வே (King Fahd Causeway) பாலத்தில் இன்று அதிகாலை முதல் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரானிடமிருந்து வரக்கூடிய சாத்தியமான வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக, இரு நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதன் காரணமாக, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மறு அறிவிப்பு வரும் வரை கிங் ஃபஹ்த் பாலம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் எல்லையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.(Online Tamil News)


