உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கேன்சர் (புற்றுநோய்) நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்குக் கடுமையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சீன விஞ்ஞானிகள் மிக எளிய மற்றும் விரைவான முறையில் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தின் (Tsinghua University) உயிர் அறிவியல் துறை பேராசிரியர் லுவோ யாங்ஷாங் (Luo Yongzhang) மற்றும் அவரது குழுவினர் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மனித ரத்தத்தில் உள்ள ‘ஹீட் ஷாக் புரோட்டீன் 90 ஆல்பா’ (Hsp90α) என்ற புரதத்தின் அளவை இவர்கள் ஆய்வு செய்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் இந்த குறிப்பிட்ட புரதத்தின் அளவு, ஆரோக்கியமான மனிதர்களை விட மிக அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் ஒரு புதிய ‘Reagent Test Kit’ (பரிசோதனைக் கருவி) ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவியின் மூலம், மனிதனின் உடலில் இருந்து எடுக்கப்படும் ஒரே ஒரு துளி ரத்தத்தைக் கொண்டு, அவருக்குள் புற்றுநோய் செல்கள் உருவாகத் தொடங்கியுள்ளதா என்பதை ஆரம்ப நிலையிலேயே மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்தக் கருவி முதற்கட்டமாக சீனாவில் உள்ள 8 முன்னணி மருத்துவமனைகளில் 2,347 நோயாளிகளிடம் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த மருத்துவப் பரிசோதனையில், நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிவதில் இக்கருவி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
புற்றுநோய் என்பது ஆரம்பக் கட்டத்தில் (Early Stage) கண்டறியப்பட்டால் அதை எளிதில் குணப்படுத்திவிட முடியும். ஆனால், அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவிய பிறகு அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினம்.

தற்போது புற்றுநோயைக் கண்டறியப் பயன்படும் CT Scan போன்ற சோதனைகளுக்குக் கூடுதல் செலவாகும். ஆனால், இந்த புதிய ரத்தப் பரிசோதனை முறை மூலம் மிகக் குறைந்த செலவிலும், மிக விரைவாகவும் புற்றுநோயைக் கண்டறிய முடியும்.
இந்த ‘Hsp90α’ பரிசோதனைக் கருவி தற்போது சீனா மற்றும் ஐரோப்பிய மருத்துவச் சந்தைகளில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் டி. வாட்சன் (James D. Watson) இந்தச் சாதனையைப் பாராட்டி சீன விஞ்ஞானிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.(Online Tamil News)