ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக தலைவர் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதி அளித்தபடி விஜய் செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ.50,000 கடன் பெற்றிருந்தால் மட்டுமே கடன் தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் விஜய்.

விவசாயிகளின் நில அளவை அடிப்படையாக வைத்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக சொல்லிவிட்டு கடன் தொகையை அளவுகோலாக வைப்பது ஏமாற்று வேலை என்று விமர்சனம் செய்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போருக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தவர்கள் இப்போது 50 ஆயிரம் ரூபாய் கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி செய்யப்படும் என்கிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

எதிர்ப்புகள் இவ்வாறு வலுத்து வரும் நிலையில் தவெகவில் இருந்தே எதிர்க்குரல் எழுந்திருக்கிறது. உழவர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் அருள் ஆறுமுகம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலையில் தவெக வேட்பாளராக களமிறங்கி, எ.வ.வேலுவிடம் தோல்வியுற்றவர். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் இவர் விஜய்க்கு எதிராக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
’’விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் தான் இந்த பாரபட்சமான கடன் தள்ளுபடி என்பது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, நீங்கள் வாக்குறுதி தரவில்லை உத்திரவாதம் கொடுத்தீர்கள் என்பதை மறக்க வேண்டாம்! உடனடியாக சிறு குறு விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் மற்றும் பெறு விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யுங்கள்.

உங்களுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது. IASகளின் பேச்சை கேட்டு இப்படி தவறான முடிவு எடுக்க கூடாது! இது தவெகவின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும்! தேர்தல் வாக்குறுதி படி செயல்படுத்துங்கள். தமிழக அரசிடம் பணம் இல்லை என்றால் முதலில் வாக்குறுதிபடி அறிவிப்பு கொடுத்துவிட்டு தேதி வாரியாக இரண்டு மூன்று கட்டங்களாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருக்கலாம்! இது விவசாயிகளிடம் பெறும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும்! தமிழக அரசே உடனடியாக உங்கள் அறிவிப்பை மாற்றி வாக்குறுதிபடி செயல்படுத்துங்கள்! ’’என்கிறார்.



