மேற்குவங்க மாநிலத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசு, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மத்ரசாக்களிலும் காலை வழிபாட்டு கூட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடுவதைக் கட்டாயமாக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வாரம் தான் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் பாடுவது கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, தற்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் மத்ரசா கல்வி இயக்ககம் மூலமாக இந்த புதிய நடைமுறை மத்ரசாக்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி, மேற்குவங்க அரசின் கீழ் இயங்கும் மாதிரி மத்ரசாக்கள், அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத மத்ரசாக்கள், அங்கீகரிக்கப்பட்ட சிசு சிக்ஷா கேந்திராக்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக மாணவர்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடலை பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களின் வழிபாட்டு முறைகளிலும் ஒரே மாதிரியான நடைமுறையை கொண்டு வரும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பள்ளி ஆய்வாளர்களும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய அடையாளமாக இருந்த வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கியுள்ள இந்த நடவடிக்கை, அம்மாநில அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


