விஜய் அமைச்சரவையை விமர்சித்த நடிகர் விஷாலுக்கு கண்டம் வலுக்கிறது.
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தவெக தொடங்கி முதலமைச்சர் ஆகிவிட்டார். அவரது அமைச்சரவை குறித்து நடிகர் விஷால் ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தார். ’’முதல்வர்ஜோசப்விஜய், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சகங்களை ஒதுக்குவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அமைச்சர் ராஜ்மோகன் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது.
உண்மையில் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ள நமது திரைப்படத் துறையின் கோரிக்கைகளையும் குறைகளையும், குறிப்பாகத் தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு நம்பிக்கைக் கதிரைக் கொடுப்பதையும், ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு சங்கமாகவோ, நான் அல்லது நாங்கள் எப்படி முன்வைப்பது? அடிமட்டத்திலிருந்து இந்தத் துறையின் ஒரு அங்கமாக இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் நமது முதல்வரை விட, நமது துறையில் என்ன நடக்கிறது என்பது பற்றி குறைந்த அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம் இதை எப்படிச் செய்வது?

ராஜ்மோகனை நான் இழிவுபடுத்தவில்லை, இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே என்று தெரிவித்திருந்தார்.
விஷாலின் இந்த கருத்தை நடிகர் அருண்விஜய் கண்டித்திருந்தார். ‘’மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் வெற்றிபெற்று, அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்; தயவுசெய்து தற்போதைய முடிவுகளில் தலையிடாதீர்கள். எத்துறையைச் சார்ந்தவரோ, அதே துறையைச் சேர்ந்த ஒருவராக இருப்பதால் அவர் நமது பிரச்சினைகளை நன்கு அறிவார் என்றும், நிச்சயமாக நமக்கு உதவுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். தயவுசெய்து அவரது முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள்; அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். நாம் இப்போதே எந்தவொரு முடிவிற்கும் வந்துவிட வேண்டாம்; அனைத்தும் நல்லபடியாகவே அமையும் என்று நம்புவோம்’’ என்கிறார்.
இந்த சூழலில் முதல்வர் விஜய்யை சந்தித்த பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் பவித்ரன், ‘’அமைச்சர்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் நானே கவனிப்பேன் என்று சொல்லியிருக்கிறார் விஜய். யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பதை ஆய்ந்தறிந்துதான் செய்திருக்கிறார் முதல்வர். அதனால் விஷால் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

’’ராஜ்மோகன் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்ல, அந்த துறையில் நல்ல அனுபவமும் கொண்டவர். அவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும், சினிமா துறையில் பலருடன் நல்ல நட்பும் நெருக்கமும் கொண்டவர். தமிழ் சினிமா துறையின் பிரச்சனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராக இருப்பதால், அவரை தமிழ் திரைப்படத் துறை அமைச்சராக தேர்வு செய்திருப்பது மிகவும் சரியான முடிவாகும்.
இந்த சிறந்த தேர்வை செய்த முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள்’’ என்று சொல்லி விஷாலை மறைமுகமாக சாடி இருக்கிறார்.



