முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இருந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அதிமுகவின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை சுற்றி நிற்கும் ஜால்ராக்கள் கூட்டம்தான் என்கிறார் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன்.
“அதிமுக இன்று சந்தித்திருக்கும் சரிவுகளையும், சோதனைகளையும் பார்க்கும்போது ஒவ்வொரு உண்மைத் தொண்டனின் நெஞ்சும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. ஒருத்தர் போனால் பரவாயில்லை, இருவர் போனால் பரவாயில்லை. இன்று சாரை சாரையாக மாற்று முகாம்களுக்கு மனிதர்கள் நகர்கிறார்கள் என்றால் அதற்கு யார் காரணம்?
கட்சியின் கொள்கை தவறா? இல்லை! அடிமட்டத் தொண்டனின் விசுவாசம் குறைந்துவிட்டதா? தேய்ந்து போய்விடவில்லை என்றால் அப்புறம் ஏன் இந்த வீழ்ச்சி?

அதிமுக இன்றைக்குக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முதன்மைக் காரணம் தலைமையைச் சுற்றி நின்று கொண்டு, சுயநலத்திற்காக “முட்டுக் கொடுப்பவர்களும்”, உண்மையை மறைத்து “ஜால்ரா” போடுபவர்களும்தான்!
”எல்லாம் நன்றாக இருக்கிறது”, “நீங்கள்தான் அடுத்த முதலமைச்சர்” என்று தலைக்கு மேல் ஐஸ் வைத்து, கள நிலவரத்தை மறைக்கும் இந்தச் சுயநலக் கூட்டம், தலைமையைச் சுவற்றுக்குள் பூட்டி வைத்திருக்கிறது. உண்மை நிலவரம் தலைமைக்குத் தெரியாமல் போனதே தொடர் சரிவுகளுக்குக் காரணம்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தை தலைவர்களை நம்பி வளர்க்கவில்லை; உங்களைப் போன்ற, எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களை நம்பித்தான் வளர்த்தார்கள். தலைவர்கள் மாறலாம், மாறிக் கொண்டே இருக்கலாம். ஆனால், தொண்டன் மாறாதவன்.

இனி தலைவர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று காத்திருப்பதில் பிரயோஜனமில்லை. தொண்டர்கள் விழித்துக் கொள்ளாதவரை, தலைவர்கள் விழித்துக் கொள்ளப் போவதுமில்லை!
இன்று தொண்டர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். “ஏன் கட்சி இப்படிப் போகிறது?” என்று வேதனையைத் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவறு! தொண்டர்கள் தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொள்வதால் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. தலைவர்கள் எப்போது விழிப்பார்கள் தெரியுமா? தொண்டன் எப்போது தன் கைகளில் கேள்விக் கணைகளை ஏந்துகிறானோ அப்போதுதான்!
இனி மாவட்டச் செயலாளர்களோ, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோ உங்கள் ஊருக்கு வரும்போது, சால்வை அணிவிப்பதையும், கோஷமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்துங்கள். நெஞ்சை நிமிர்த்தி, நேருக்கு நேர் நின்று கேள்வி கேளுங்கள்.
”ஏன் இப்படி கட்சி சென்று கொண்டிருக்கிறது?” ”சரிந்து கொண்டிருக்கும் இந்த இயக்கத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்?” ”நாங்கள் யாருக்காக களத்தில் நிற்க வேண்டும்? எங்களுக்கான விடை என்ன?” இது வன்முறையல்ல, கட்சியின் மீதான அதீத பற்றுதல்!
இந்த இயக்கத்தின் அச்சாணியே ‘கிளைச் செயலாளர்’ தான். ஒவ்வொரு கிளைச் செயலாளரும், ஒவ்வொரு வார்டின் தொண்டனும் ஒற்றைக் குரலில் முழங்க வேண்டும், “எங்களுக்குப் பொதுச் செயலாளரிடம் நேரடியாகப் பேசுவதற்கு வாய்ப்புக் கொடுங்கள்!” என்று கேட்க வேண்டும்.
இடைத்தரகர்களும், ஜால்ராக்களும் இல்லாத ஒரு தளத்தில், அடிமட்டத் தொண்டனின் குமுறல்களும் ஆலோசனைகளும் நேரடியாகப் பொதுச் செயலாளரின் காதுகளுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் கள நிலவரம் என்னவென்று தலைமைக்குத் தெரியும். தவறைத் திருத்திக் கொள்ளும் ஞானம் பிறக்கும்.
ஒரு காலத்தில் கிளைச் செயலாளராக, சாதாரணத் தொண்டனாக இருந்து வந்தவர்தான் இன்றைய பொதுச் செயலாளர். ஜால்ராக்களின் புகழுரைகளை விட, தொண்டனின் கசப்பான கேள்விகளில்தான் உண்மையான பாசம் இருக்கிறது என்பதை அவரும் உணர்வார்!
கேள்வி கேட்காத தொண்டன் இருக்கும் வரை, தவறைத் திருத்தாத தலைமைகளே மிஞ்சும். எப்போது ஒரு தொண்டன் பயமற்று கேள்வி கேட்கத் தொடங்குகிறானோ, அன்றுதான் இந்த இயக்கம் புது இரத்தம் பாய்ந்து, பலம் பெற்று, மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழும்!
ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால், தொண்டா… வீறுகொண்டு எழு! கேள்வி கேள்! இயக்கத்தைக் காப்பாற்று!
இனி தலைவர்களிடம் பேசிப் பயனில்லை என்று தொண்டர்களிடம் பேச பயணப்பட்டு இருக்கிறேன். அதிமுக மீது உண்மையான அக்கறை இருப்பவர்கள் இதை ஒவ்வொரு தொண்டனிடமும் கொண்டு சேருங்கள்.’’