வியக்கத்தக்க வகையில் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்தார் ரஜினி. ஆனால், விளையாட்டுத்தனமாக இருந்தே வெற்றி பெற்றுவிட்டார் விஜய் என்கிறார் ரஜினி தொடங்க முற்பட்ட கட்சியில் மேற்பார்வையாளராக இருந்த தமிழருவி மணியன்.
கடந்த 2020ல் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு ஹைதராபாத்திற்கு ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கிற்காக சென்ற ரஜினி, ஹைதராபாத்தில் இருந்து திரும்பியதும் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்துவிட்டார். கட்சி தொடங்குவதற்காக ரஜினி எடுத்துக்கொண்ட வருடங்கள் மூன்று வருடங்கள். அது குறித்து மனம் திறந்திருக்கிறார் தமிழருவி மணியன்.
‘’ எதையும் உடனே செய்துவிட மாட்டார் ரஜினி. ஒருவார்த்தை சொன்னாலும் அதை பலமுறை தன் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டு அப்புறம்தான் சொல்லுவார். கட்சி தொடங்க வேண்டும் என்று நினைத்ததும் அதற்காக அவர் மூன்றாண்டுகள் முயற்சிகள் எடுத்து வந்தார்.

யாரையும் காயப்படுத்தக்கூடாது, யாரின் வெறுப்பையும் சம்பாதிக்கக்கூடாது. எல்லோரிடமும் நட்பு பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி. அதுதான் அவரின் அரசியலுக்கு முதல் எதிரியாக இருந்தது.
தான் கட்சி தொடங்கினால் யாரையும் விமர்சனம் செய்ய மாட்டேன். தான் என்ன செய்வேன் என்பதை மட்டுமே சொல்வேன் என்றார் ரஜினி. ஆனால், யாரையும் விமர்சனம் செய்ய மாட்டேன் என்று நினைத்தது சரியாக இருக்காது என்று சொன்னேன். தவறை சுட்டிக்காட்டித்தான் வேண்டும் என்று சொன்னேன். அதை அவர் கேட்கவில்லை.
தான் கட்சி தொடங்கினால் தன்னை வாழவைத்த ரசிகர்களை மட்டுமே தேர்தலில் போட்டியிட வைப்பேன் என்று அவர் சொல்லவில்லை. சமூக சேவையில் ஈடுபாடுள்ள பலரையும் தன் கட்சி சார்பில் தேர்தலில் நிறுத்த வேண்டும். மாற்று அரசியலை செய்ய வேண்டும் என்று ரஜினி நினைத்தார். கருத்தியல் ரீதியான அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. அதற்கு உதாரணம் சீமான் இருக்கிறார். கவர்ச்சியான அரசியல்தான் தமிழ்நாட்டில் எடுபடும் என்று எடுத்துச்சொன்னேன். அதிலும் அவர் உடன்படவில்லை.
மூன்றாண்டுகள் அவர் எவ்வளவோ என்னிடம் தனிப்பட்ட முறையில் மனம் விட்டு பேசி இருக்கிறார். ரஜினி சொன்னது எல்லாவற்றையும் வெளியே சொல்வது நாகரீகம் ஆகாது.
எப்போதும் சுறுசுறுப்பாக தெம்பாக இருக்கும் ரஜினி அன்றைக்கு போன் செய்து என்னிடம் மறுநாள் பேசினால்தான் நிம்மதி கிடைக்கும் என்று சொன்னார். அன்று இரவு முழுவதும் என்ன சொல்லப்போகிறார்? என்று நினைத்து தூக்கம் வரவில்லை. மறுநாள் போனபோது வேட்டி, முண்டா பனியனில் சோகமாக இருந்தார். முதலில் என்னிடம் மன்னிப்பு கேட்டார். கட்சி தொடங்கவில்லை என்று சொல்லி அதிரவைத்தார்.

எவ்வளவோ சொன்னேன். உங்கள் பிம்பம் உடைந்துவிடும் என்று எவ்வளவோ சொன்னேன். அவர் முடிவெடுத்துவிட்டார்.
அதற்கு பல காரணங்கள் உண்டு. தான் அரசியலுக்கு வரலாமா? என்று பல நடிகர்களிடம் கருத்து கேட்டார் ரஜினி. ஒரு நடிகர் கூட ரஜினியிடம் பாசிட்டிவ்வாக பேசவில்லை. எல்லோருமே எதிர்மறையாகவே கருத்து சொன்னார்கள். அவற்றை எல்லாம் அப்படியே நம்பிவிட்டார் ரஜினி. அதுதான் ரஜினி செய்த இமாலய தவறு.
அப்புறம், ரஜினி பின்வாங்கியதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள்தான். ரஜினி வந்தால் வெற்றி பெற முடியாது என்று சொன்னதை ரஜினி நம்பிவிட்டார். குறிப்பாக கருத்துக்கணிப்புகள். ரஜினி வந்தால் 4 சதவிகித வாக்குகள்தான் கிடைக்கும் என்பதை அவர் நம்பிவிட்டார்.

அரசியலுக்கு வந்தால் களப்பணி அவசியம். அதற்கு உடல்நிலை ஒத்துழைக்காது என்று சொன்னார். டிஜிட்டல் யுகத்தில் இருந்த இடத்தில் இருந்தே மக்களிடம் தொடர்பில் இருக்கலாம் என்று சொன்னேன். ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை விடும் அரசியல்வாதியாக இருக்க ரஜினி விரும்பவில்லை. இன்றைக்கு அதே டிஜிட்டல் மூலம் சமூக வலைத்தளங்களை மட்டும் பயன்படுத்தியே விஜய் வந்துவிட்டார். இதை நான் அன்றைகே சொன்னேன். எல்லோருக்கும் நண்பராக இருக்க வேண்டும் என்று நினைத்த ரஜினி அதை ஏற்கவில்லை’’