மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனப் பகுதியில், நெஞ்சை உலுக்கும் கொடூரமான துயர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. லாரி ஒன்று பழுதடைந்து நடுவழியில் நின்றதால், கடுமையான வெயிலிலும் தாகத்தாலும் தவித்த 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பழுதடைந்த லாரி – சிக்கிய பயணிகள்
மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, லாரி ஒன்றில் நைஜர் நாட்டைச் சேர்ந்த பயணிகள் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தனர். நைஜர்-அல்ஜீரியா எல்லைக்கு அருகே உள்ள அசமகா (Assamaka) என்ற பகுதிக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த லாரி பழுதடைந்து பாலைவன மணலுக்குள் சிக்கிக்கொண்டது.

ஓட்டுநரும் அவரது உதவியாளர்களும் பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தை சரிசெய்ய முடியவில்லை. சகாரா பாலைவனத்தின் கொளுத்தும் கத்தரி வெயிலில், அவர்கள் கையில் வைத்திருந்த அத்தியாவசிய உணவு மற்றும் குடிநீரும் சில நாட்களில் தீர்ந்துபோனது. மாற்று உதவியும் கிடைக்காததால், தீவிர வெப்பம் மற்றும் தாகத்தின் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 49 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
50 கி.மீ நடந்து உயிர் தப்பிய இருவர்
இந்த கோர விபத்தில் சிக்கியவர்களில் இரண்டு பேர் மட்டும் தங்களின் தாகத்தையும், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் உயிர் பிழைக்கப் போராடினர். அவர்கள் பாலைவன மணலில் சுமார் 50 கிலோமீட்டருக்கும் மேல் நடந்தே சென்று ஒரு நீர்நிலையைக் கண்டுபிடித்து தங்கள் உயிரைக் காத்துக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து அசமகா பகுதிக்குச் சென்று, அதிகாரிகளிடம் இந்த துயரச் செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

பொதுப் புதைகுழியில் அடக்கம்
தகவலறிந்து நைஜரின் அகாடெஸ் (Agadez) பிராந்திய ஆளுநர் ஜெனரல் இப்ரா பௌலாமா இசா தலைமையிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். லாரியைச் சுற்றிலும் ஆங்காங்கே உடல்கள் சிதறிக் கிடந்தன.பாலைவனத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் உடல்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மீட்கப்பட்ட 49 பேரின் உடல்களும் அங்கேயே ஒரு பொதுப் புதைகுழியில் (Mass Graves) கண்ணீருடன் அடக்கம் செய்யப்பட்டதாக நைஜர் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(Online Tamil News)


