துபாய் ஆட்சியாளரின் மருமகனும், ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமின் குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஷேக் சயீத்தின் முன்னாள் மனைவி ஜெய்னப் ஜவாட்லி (Zeynab Javadli) மற்றும் அவரது மூன்று குழந்தைகள் திடீரென காணாமல் போயிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசர்பைஜான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச ரிதம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 34 வயது ஜெய்னப் ஜவாட்லி, ஷேக் சயீத்தை திருமணம் செய்து துபாயில் குடியேறினார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமண வாழ்க்கை முறிந்தது. அதன் பின்னர் குழந்தைகளின் காப்பாளர் உரிமை தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்டகால சட்டப் போராட்டம் நடந்து வந்தது.
சமீபத்தில் துபாய் நீதிமன்றம் குழந்தைகளை அவர்களின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக ஜெய்னப் போராடி வந்தார். இதற்கிடையில், குழந்தைகளை தாயார் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருப்பதாக ஷேக் சயீத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஜெய்னபின் பிரிட்டிஷ் வழக்கறிஞர் டேவிட் ஹேக், செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜெய்னப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் திடீரென அவரிடமிருந்தான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக காவல்துறையினர் இரவு நேரத்தில் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைக்குப் பின்னரே ஜெய்னப் மற்றும் குழந்தைகள் மாயமாகியுள்ளனர் என வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்னபின் வீட்டிற்குச் சென்ற அவரது தாயார், வீடு பூட்டப்பட்டு வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் முறையான விளக்கம் கிடைக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு துபாய் போலீஸ் தன் வீட்டிற்கு வந்தபோது, ஜெய்னப் அதை சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பினார். என் குழந்தைகளுடன் இருப்பதற்கான கடைசி வாய்ப்பு இதுதான், உதவி கேட்பதற்காகவே இந்த நேரலையைத் தொடங்கினேன் என்று அவர் அதில் உருக்கமாகப் பேசியிருந்தார். இதனால், அனுமதியின்றி அதிகாரிகளின் நடவடிக்கையை ஒளிபரப்பியதாக அவர் மீது இணையவழிக் குற்றச்சாட்டு வழக்குப் பதியப்படலாம் என்ற அச்சமும் இருந்தது.
இந்தச் சம்பவம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. ஜெய்னப் மற்றும் குழந்தைகளின் தற்போதைய இருப்பிடம் இன்னும் மர்மமாகவே உள்ளது.(Online Tamil News)


