பாஜகவின் முன்னாள் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அண்மைக்காலமாக தீவிர ஆரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர் இன்ற் அக்கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக சொல்லி, இணைதள பக்கத்தில் உறுப்ப்னர் சேர்க்கை அறிவித்ததும் நிமிடத்திற்கு நிமிடம் உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர் சேர்க்கை நடந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யார் இந்த அண்ணாமலை?
கரூர் மாவட்டத்தில் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. குப்புசாமி – பரமேஸ்வரி ட் தம்பதியின் மகன் அண்ணாமலை, கோவையில் பொறியியல் முடித்ததும், இந்திய மேலாண்மை பல்கலையில் எம்.பி.ஏ. பெற்றார். 2011ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்று கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆனார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கினார். இரவு நேரங்களில் ரோந்து சென்று சட்டவிரோத செயல்களை கண்டித்தல், போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் என்று சினிமா ஹீரோக்கள் மாதிரி அதிரடி காட்டியதில் மக்களிடையே ஈர்க்கப்பட்டார். இதனால் அண்ணாமலையை ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.
கைலாச மலையில் மனமாற்றம்:
காவல் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்று கர்நாடகத்தில் உடுப்பி, சிக்மளூரு மாவட்ட எஸ்பியாகவும், பெங்களூரு தெற்கு மாவட்ட டிசிபியாகவும் பணியாறி வந்த அண்ணாமலைக்கு, 2019ல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது மனமாற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் 2019ல் மே மாதம் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.

வீதி லீடர்:
அரசியல் களத்திற்கு ஆயத்தாமகும் நோக்கில் ’வீதி லீடர்’ எனும் அமைப்பை தொடங்கி சமூக சேவைகள் செய்து வந்தார்.
இது போக விவசாயத்திலும் கால்நடைகள் வளர்ப்பிலும் அதிக ஆர்வம் காட்டினார் அண்ணாமலை. நாட்டு மாடுகள், ஆடுகள் அதிகம் வளர்த்து வந்தார்.

முதல்வர் வேட்பாளர் – ரஜினி அழைப்பு:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முற்பட்டபோது, கட்சியின் தலைவராக மட்டுமே தான் இருப்பேன் என்றார். முதல்வர் வேட்பாளர் ஒரு இளைஞர்தான் என்று உறுதியாகச் சொன்னார். அந்த நேரத்தில் அந்த இளைஞர் அண்ணாமலைதான் என்ற பரபரப்பு எழுந்தது.
அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்து வந்த அண்ணாமலை, 2020ல் என்ன நடந்தது? என்பது குறித்து இன்று மனம் திறந்திருக்கிறார். ‘’ரஜினி சார் தன் கட்சியில் சேரச்சொல்லி எனக்கு போன் செய்தார். ஆனால், நான் அப்போது வலதுசாரி சிந்தையிலும், ஆர் .எஸ்.எஸ். கூட்டங்களிலும் பங்கேற்று வந்த நிலையில் பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கும் விசயத்தைச் சொல்லி மறுத்துவிட்டேன். ஆனாலும் அதன் பின்னர் பல நேரங்களில் நான் ரஜினி சாரை பார்த்து வருகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
பாஜக – துணை தலைவர்:
2021ம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் தேதியில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் அண்ணாமலை. கட்சியில் இணைந்ததுமே அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போது எல்.முருகன் மாநில தலைவராக இருந்தார்.
பாஜக தலைவர்:
எல்.முருகன் ஒன்றிய இணை அமைச்சர் ஆனபின்னர், மாநில தலைவரானார் அண்ணாமலை. இவர் தலைவர் ஆனபின்னர் பாஜக தமிழகத்தில் பேசுபொருள் ஆனது. தினந்தோறும் அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என்று பாஜகவை தமிழகத்தின் மூலை முடுக்களில் எல்லாம் கொண்டு சென்றார்.

வியூகம் – எதிர்ப்பு:
கூட்டணியை நம்பியே தமிழக பாஜக இருந்தது. இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார் அண்ணாமலை. கூட்டணி வைக்காமல் பாஜகவை பெரிய கட்சியாக வளர்த்தெடுத்து ஆட்சிக்கட்டிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார். இதனால் அதிமுக கட்சியை உதாசீனப்படுத்தி வந்தார். டெல்லி தலைமை இதை ஏற்கவில்லை. ஆனாலும் அண்ணாமலையின் பேச்சினால் அதிமுக – பாஜக இரு தரப்பிலும் சுமூகமான உறவு ஏற்படவில்லை. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. அந்த தேர்தலில் இந்த கூட்டணி படு தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலையின் நடத்தைதான் என்பதால் டெல்லி தலைமை இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தது.
2026 சட்டமன்ற தேர்தலின் போது பழைய கசப்புகளை மறந்து கூட்டணி வைக்க அதிமுக சம்மதித்தாலும், மாநில தலைவராக அண்ணாமலை இருக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்ததால் அண்ணாமலையை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை மாநில தலைவர் ஆக்கியது தலைமை.

18 மாத அதிருப்தி:
தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதில் இருந்தே கட்சி வேலைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். கட்சியில் இருந்து விலகுவதாக முன் வந்த போதிலும் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி, இப்போதைக்கு வேண்டாம் என்று தலைமை சொல்லி இருந்தது. சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் இப்போது ராஜினாமா செய்திருக்கிறது. பாஜக தலைமை அவரது ராஜினாமாவை ஏற்றிருக்கிறது.
புதிய இயக்கம் – இளைஞர் படை:
பாஜகவில் இருந்த போது தனக்கென்று ஒரு இளைஞர் படையை சேர்த்து வைத்திருந்தார். அந்த இளைஞர் படையை தனது புதிய இயக்கத்திற்கு மடை மாற்றி வருகிறார். அரசியல் கட்சியின் முதற்கட்டமாக அண்ணாமலை ஆரம்பித்த புதிய இயக்கத்தில் 3 மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறார்.



