தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. இங்கிருந்த முக்கிய கோப்புகள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்த 18 ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி வாங்கிய டெண்டர்கள், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான விபரங்கள் இருந்துள்ளன.
மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, ‘’மின் துறையில் நடந்த ஊழல் குறித்து சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சில ஊழியர்களும் சில அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்தான் இந்த திருடுக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு விவகாரத்தில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாருக்கு திருடப்பட்டது? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

தமிழகத்தில் நிலவும் மின் தடை பிரச்சனையை திசை திருப்பவே இந்த திருட்டு புகார் என்று சொல்கிறார் முன்னாள் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இதை மறுக்கிறார் நிர்மல்குமார்.
’’ஹார்டு டிஸ்க் என்ன மந்தையில் இருக்கும் ஆடா? நள்ளிரவில் வந்து திருடு போவதற்கு? இந்த திருட்டில் கண்டிப்பாக ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள். சிபிஐ இதை விசாரிக்க வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டும்’’ என்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

விவகாரம் பெரிதாகிக்கொண்டே போகிறது. பின்னணியில் யார்? என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறது மின்துறை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.



