மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே சென்ற ஈரானிய சரக்குக் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த போர்நிறுத்தம் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. அப்போது அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறிச் சென்ற டௌஸ்கா என்ற ஈரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல், ஓமன் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வழிமறிக்கப்பட்டது. அமெரிக்கப் படைகள் இக்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றிய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சர்வதேசக் கடல் கொள்ளை என்று வர்ணித்துள்ள ஈரான், இது இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.(Online Tamil News)


