ஒளிவு மறைவு இன்றி எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக சொல்லப்போகிறார் ரஜினிகாந்த்.
ஒரு பெண் மருத்துவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் சுயசரிதையை எழுதும் முயற்சியை முன்னெடுத்தார். அது அப்போது முடியாமல் போய்விட்டது.
அதன் பின்னர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வைத்து தனது சுய சரிதையை எழுதினார் ரஜினி. அப்போது ரஜினி சொல்லச்சொல்ல ராமகிருஷ்ணன் எழுதி வந்தார். அந்த நேரத்தில் தன் வாழ்க்கையில் நடந்த பல விசயங்களை சொன்னபோது சில நிகழ்வுகளை சொல்லலாமா? சொன்னால் சங்கடங்கள், சர்ச்சைகள் எழுமா? என்று யோசித்திருக்கிறார். அதனால் நிகழ்வுகளை மறைத்து சொல்லி இருக்கிறார்.

அப்புறமாக யோசித்த ரஜினி, உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் சுய சரிதை. பல உண்மைகளை மறைத்து சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அது எப்படி சுய சரிதை ஆகும்? என்று எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்ட ரஜினி, சுய சரிதை எழுதும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டார்.
அதன் பின்னர், தான் சுயசரிதையில் சொல்ல நினைத்த பலவற்றையும் தனது பட விழாக்களில் பேசி வந்தார் ரஜினி. இந்நிலையில் தற்போது மீண்டும் தனது சுய சரிதையை எழுத தொடங்கி இருக்கிறார் ரஜினி.

ரஜினி சொல்லச் சொல்ல பத்திரிகையாளர் ஒருவர் எழுதி வருகிறார். எதையும் மறைக்காமல் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக சொல்ல முடிவெடுத்திருக்கிறார் என்கிறது கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டப வட்டாரம்.



