பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் உள்ள சமன் பாடக் இரயில்வே வழித்தடத்தில், ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

குவெட்டாவில் இருந்து பெஷாவர் நகரை நோக்கி ‘ஜாபர் எக்ஸ்பிரஸ்’ ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்த ஏராளமான பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் பயணித்தனர். ரயில் சமன் பாடக் சிக்னல் பகுதியை கடக்க முயன்றபோது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்த தற்கொலைப்படை , ரயிலின் ஒரு பெட்டி மீது மோதி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கவிழ்ந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த ராணுவ வீரர்களையும் பயணிகளையும் மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக குவெட்டாவில் உள்ள ராணுவ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த கொடூரமான தற்கொலைப்படை தாக்குதலுக்கு, பாகிஸ்தானால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army – BLA) பொறுப்பேற்றுள்ளது. தங்களின் ‘ஃபிதாயீன்’ பிரிவைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி மூலமாக பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோர் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு உறுதியுடன் செயல்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் தங்களுக்கு தன்னாட்சி உரிமை வேண்டும் என்றும், அங்குள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகவும் கூறி BLA போன்ற பிரிவினைவாத அமைப்புகள் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


