ஜனநாயகம் எல்லாருக்கும் உரிமையைத் தருகிறது. த.வெ.க என்ற புதிய கட்சி தேர்தலை சந்தித்ததும் அப்படித்தான். ஆனால், தேர்தலுக்கோ அரசியலுக்கோ முற்றிலும் தகுதியற்றத் தன்மையில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் தொடர்ந்து செயல்பட்டு வருவது பொதுமக்களிடம் நன்றாக அம்பலப்பட்டு விட்டது. அதை மறைப்பதற்காக ஊடகங்களிலும் சோஷியல் மீடியாக்களிலும் விஜய் மற்றும் த.வெ.க.வின் வெற்றி குறித்து ஊதிப் பெரிதாக்கப்படும் செய்திகள் பெய்டு புரமோஷன் என்ற முறையில் மிக அதிகமாக வெளியாகி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. குறிப்பிட்ட அளவில் வாக்குகளைப் பெறும் என்பதும், வேட்பாளர்கள் யார் என்று தெரியாவிட்டாலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட சதவீதத்தினர் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், விஜய்தான் முதலமைச்சர் என்று தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றும் செயலை விஜய் தரப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
குழந்தைகளைத் தூண்டிவிட்டு, உங்கள் வீட்டில் அடம்பிடித்து அம்மா, அப்பா, அத்தை, மாமா எல்லாரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடச் சொல்லுங்க என்று விஜய் செய்த பிரச்சாரம் என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் வாக்களிக்க முடியும். அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் செய்யமுடியும். அடம்பிடித்தோ, கட்டாயப்படுத்தியோ ஓட்டுப்போடச் சொல்வது தண்டனைக்குரியது. குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவது தடை செய்யப்பட வேண்டியது.
விஜய் சொன்னதுபோல குழந்தைகள் அடம்பிடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. எனினும், தமிழ்நாட்டில் தாங்கள் விரும்புகிற கட்சிக்கு 50 ஆண்டுகளாக வாக்களித்து வருபவர்கள் பிள்ளைகள் வலியுறுத்தியதற்காக விசிலுக்கு ஓட்டுப்போட்டதாக வெளியில் சொன்ன அளவில் உண்மையாக வாக்களிக்கவில்லை என்பது ஊடக சர்வேக்களில் தெரியவந்துள்ளது. எப்போதும் போல அவரவர் விரும்புகிற கட்சிக்கே வாக்களித்துள்ளனர். விஜய்யை பார்க்க வந்த கூட்டம் மொத்தமும் விசிலுக்கு ஓட்டுப்போடவில்லை என்பதும், அந்தக் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவினருக்கு ஓட்டே கிடையாது என்பதும், ஓட்டுரிமை உள்ள விஜய் ரசிகர்கள் பலர் எஸ்.ஐ.ஆரில் தங்கள் வாக்குரிமையைப் புதுப்பிக்கவில்லை என்பதும் தொடர்ந்து வெளியாகிவருகிறது.
70 வயது கடந்தவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தனர். உதயநிதி, சீமான் ஆகியோர் எல்லாத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தனர். ஆனால், முதலமைச்சர் கனவில் உள்ள விஜய் மிகக் குறைவான அளவிலேயே பிரச்சாரம் செய்தார். பல மாவட்டங்களில் போட்டியிட்ட தன் கட்சி வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்யவில்லை. பிரச்சாரம் செய்த இடங்களிலும் வேட்பாளரின் சிறப்பு, தகுதி பற்றி எதுவும் குறிப்பிடாமல், சில தொகுதிகளில் வேட்பாளரின் பெயரைக்கூட சொல்லாமல், இந்த விஜய்.. இந்த விஜய்.. என்று தன்னை மட்டுமே முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது, அந்தந்த தொகுதியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகராக விஜய் பெற்றிருந்த அபரிமிதமான ஆதரவும் ரசிகத்தன்மையும் முழுமையான அளவில் ஓட்டாக மாறவில்லை. அவர் சொன்ன டிரஸ்கோடில் வந்து வாக்களித்தவர்கள் ஒவ்வொரு பூத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலும், அவர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலும் இரட்டை இலக்க அளவிலுமே இருந்த தகவல் வாக்குப்பதிவு முடிந்த அன்றே பனையூர் பங்களாவிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியூக வகுப்பாளர்களாக அறியப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தங்களின் சுயநலத்திற்காக த.வெ.க.வையும் விஜய் ரசிகர்களையும் பயன்படுத்திக்கொண்டுள்ளனர் என்பதும், ஜான் ஆரோக்கியசாமி ஒரு விதமாகவும், ஆதவ் அர்ஜூனா மற்றொரு விதமாகவும் முடிவெடுத்து செயல்பட்டது த.வெ.க.வுக்கு பாதிப்பையே உண்டாக்கியுள்ளது. இதில் புஸ்ஸி ஆனந்த்தின் தனி ரூட் கலெக் ஷன், த.வெ.க.வும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்ற எண்ணத்தை சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே உருவாக்கியுள்ளது. பண செல்வாக்குள்ள த.வெ.க. வேட்பாளர்கள் அவர்களின் தொகுதியில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளனர்.
அ.தி.மு.க.வை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் திட்டம். அதற்கு தி.மு.க ஆதரவு சிறுபான்மை வாக்குகள், தலித் வாக்குகள், பெண்கள் வாக்குகளைப் பிரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டவரே விஜய் என்பது, அவரது பிரச்சாரத்திலேயே வெட்டவெளிச்சமாகிவிட்டது. பா.ஜ.க.வின் பிரபலங்கள் போட்டியிடும் எந்தத் தொகுதியிலும் அவர் கவனம் செலுத்திப் பிரச்சாரம் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அவரது கட்சிக்கு நேரடிய வேட்பாளரே இல்லை.
இதற்கெல்லாம் காரணம், டெல்லியிலிருந்து பனையூருக்கு அடிக்கடி போனில் பேசிய அமித்ஷாவின் நெருக்கடிதான்.
ஒரு பக்கம் அமித்ஷா, இன்னொரு பக்கம் திரிஷா இவ்வளவுதான் விஜய்யின் ஆளுமை. இது அவரது ரசிகர்களுக்குத் தெரியாதபடி அவரை சுற்றி இருப்பவர்கள் பார்த்துக்கொண்டனர். சோஷியல் மீடியா வாரியர்ஸ் எனப்படும் பெய்டு புரமோஷன் குரூப்புகளை விஜய்யின் துதிபாடிகளாகத் தொடர்ந்து பயன்படுத்தினர். எனினும், அவர்களிலும் தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் உண்டு. சினிமா துறையினரிலும் பலர் விஜய்க்கு எதிராக ஒரு விரல் புரட்சி நடத்தியிருப்பதை கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
இளைஞர்கள்-பெண்கள் வாக்குகளை ஓரளவு த.வெ.க. பெற்றிருந்தாலும் சீட்டுகளை ஜெயிக்கவோ ஆட்சியமைக்கவோ முடியவே முடியாது என்ற உண்மை தெரிந்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை ஹைப் இருக்க வேண்டும் என்பதால் திருச்செந்தூரில் யாகம், சாய்பாபா கோயிலுக்கு விஜயம் என்று விஜய்யை ஏமாற்றும் அதே கூட்டம் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி ஏற்படும்போது, வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. செய்த சதியால் த.வெ.க. தோற்கடிக்கப்பட்டதாகவும், விஜய் முதல்வராவதைத் தடுத்துவிட்டார்கள் என்றும் ரசிகர்களைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வதே விஜய்யை சுற்றி இருப்பவர்களின் கொடூரத் திட்டம். விஜய் இவை எல்லாவற்றிலும் நடிகராகத் தன் பங்களிப்பை செய்து வருகிறார் என்பதுதான் சைக்கோத்தனத்தின் உச்சம். கரூரைப் போல தமிழ்நாடெங்கும் தன் ரசிகர்களை பலி கொடுக்கும் வெறித்தனத்தின் உச்சத்தை விட்டுவிட்டு வர அவர் தயாராக இல்லை.



