என் பிள்ளையை நான் இழந்து நிற்பதற்கு முதல்வர் விஜய்தான் காரணம் என்று கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசினார் பிக்பாஸ் ஜூலி.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன் மீது தவெகவினர் அவதூறு பரப்புகிறார்கள் என்று புகார் அளித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘’விஜய்யை பற்றி நான் பேசும்போதெல்லாம் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். என்னையும் என் கணவரையும் தரக்குறைவாக பேசுகிறார்கள். நான் கிட்னி திருடி என்று என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள். ஒருவரின் சம்மதம் இல்லாமல் எடுப்பதுதான் திருடு ஆகும். இது கூட தெரியாமல் என்னை திருடி என்கிறார்கள்.

இதனால் மார்ச் மாதம் 8 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தேன். இந்த புகார் கிரிமினல் செக்சனில் வராது என்று தவெக ஆட்சிக்கு வந்த பிறகு எனக்கு நோட்டீஸ் வந்திருக்கிறது. என்னிடம் இருந்த எந்த ஆதாரத்தையும் போலீசார் வாங்கிக்கொள்ளவில்லை.
நானும் என் கணவரும் பெசண்ட் நகர் கடற்கரையில் கிட்னி வாங்கிக்தருவதாகச் சொல்லி 15 லட்சம் வாங்கியதாக அவதூறு சொல்கிறார்கள். பாம் போட்டு என்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள்.
மார்ச் மாதம் என் மீது அவதூறு பரப்பியவர்களால் மன உளைச்சல் ஏற்பட்டு என் கர்ப்பம் கலைந்துவிட்டது. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது கேலியாக இருந்துவிடலாம். எனக்கு அப்படி அல்ல. டிவிகேவுக்கு எதிராக பேசினேன் என்கிகிற ஒரே காரணத்திற்காக மனசாட்சி இல்லாமல் என் கேரக்டரை தவறாக சித்தரித்து, என் பெயரை கெடுத்துவிட்டார்கள். என் பிள்ளையையும் இழந்துவிட்டேன்.
கரூர் சம்பவத்தில் 51 இறந்ததற்கு தான் காரணம் இல்லை என்று விஜய் சொல்கிறார். ஆனால் நான் இன்றைக்கு என் பிள்ளையை இழந்ததற்கு அவர்தான் காரணம்.
ஆபாசமாக, அவதூறாக பேசக்கூடிய அவரது கட்சிக்காரர்களிடம் பெண்களை அப்படி பேசக்கூடாது என்று அவர் கண்டித்திருந்தால் நான் என் பிள்ளையை இழந்திருக்க மாட்டேன். ’’என்று கண்ணீருடன் தெரிவித்தார்.



