தவெக ஆட்சி அமைந்ததும் முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அதிமுகவின் அதிருப்தி அணியினரையும் நேரில் சந்தித்த விஜய் எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியை மட்டும் ஏன் விஜய் சந்திக்கவில்லை? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

எல்லோரையும் போல் பழனிசாமியை விஜய் சந்திருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் எழுந்திருக்காது என்றார் சிபிஐ சண்முகம்.

இதற்கு அமைச்சர் நிர்மல்குமார், ’’அனைத்து தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்றே முதல்வர் விஜய் விரும்பினார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் அப்போது நேரம் கேட்கப்பட்டது. ஆனால், ஒரு சில தலைவர்கள் அப்போதைய சூழ்நிலை கருதி, அதாவது அவர்களுடைய தனிப்பட்ட சூழ்நிலை கருதி இப்போதைக்கு வேண்டாம். நாங்களே தோல்வியுற்று இருக்கிறோம். இந்த நேரத்தில் சந்தித்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி நேரம் ஒதுக்கவில்லை’’ என்று விளக்கமளித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இதை மறுக்கிறார். ’’பழனிசாமியை சந்திக்க விஜய் நேரம் கேட்கவில்லை. அப்படி நேரம் கேட்டதாக அமைச்சர் சொல்வது தவறு. ஆனால் நிர்மல்குமார் சொல்வது சரியல்ல. தேவையில்லாமல் வார்த்தையை விடக்கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை கொண்டாடுகிறார் விஜய் என்கிறீர்கள். அப்படி பார்க்கும் போது பழனிசாமியைத்தானே முதலில் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று செயல்படுகிறார் அவர்’’என்கிறார்.



