உலகையே அச்சுறுத்தி வரும் டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா போன்ற ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த, கொசுக்களைக் கொண்டே கொசுக்களை அழிக்கும் வினோதமான புதிய திட்டத்தை கூகுள் (Google) நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘வெரிலி’ (Verily) கையில் எடுத்துள்ளது.

தங்களின் ‘டீபக்’ (Debug) திட்டத்தின் கீழ், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட சுமார் 3.2 கோடி ஆண் கொசுக்களை அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் பறக்கவிட அந்நிறுவனம் அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

இந்தத் திட்டம் கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், இதன் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான அறிவியல் ஒளிந்துள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் கோடிக்கணக்கான ஏடிஸ் (Aedes aegypti) ஆண் கொசுக்களுக்கு ‘வோல்பாச்சியா’ (Wolbachia) என்ற இயற்கையான பாக்டீரியா தொற்று ஏற்படுத்தப்படுகிறது. இந்த வோல்பாச்சியா பாக்டீரியா கொண்ட ஆண் கொசுக்கள், காடுகளில் உள்ள சாதாரண பெண் கொசுக்களுடன் இணையும் போது, உருவாகும் முட்டைகள் பொரிக்காது (அதாவது குஞ்சுகளாக மாறாது). இதனால் அடுத்த தலைமுறை கொசுக்கள் உருவாவது தடுக்கப்பட்டு, காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை பெருமளவில் தானாகவே குறைந்துவிடும்.

ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது, அவை தாவரங்களின் தேனை மட்டுமே உணவாகக் உட்கொள்ளும். பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து இரத்தம் குடிப்பதோடு, நோய்களையும் பரப்புகின்றன. எனவே, இந்த 3.2 கோடி ஆண் கொசுக்களை வெளியில் விடுவதால் மனிதர்களுக்கு எந்தக் கடி ஆபத்தும் இருக்காது.

தற்போது கொசுக்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயன மருந்துகள் மற்றும் புகை அடிக்கும் முறைகளுக்கு (Fogging) கொசுக்கள் பழகிவிட்டன. இதனால் புதிய வழிகளைத் தேடிய அறிவியல் உலகம், இறுதியாக இந்த உயிரியல் முறையைக் கண்டறிந்துள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சிறிய அளவிலான சோதனைகளில், இந்த முறையின் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் கொசுக்களின் எண்ணிக்கை 80% முதல் 90% வரை குறைந்துள்ளது என்றும், டெங்கு பாதிப்பு 70% வரை சரிந்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரசாயனங்கள் இல்லாத, சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதுகாப்பான இந்த உத்தி உலக சுகாதார அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.(Online Tamil News)


